அனோஜனின் விடுதலைக்காக கையெழுத்து சேகரிப்பு
சவூதி அரேபியாவில் சட்ட நடவடிக்கையை எதிர்கொண்டுள்ள அம்பாறை, நற்பிட்டிமுனையைச் சேர்ந்த சிவராசா அனோஜனை நாட்டிற்கு மீண்டும் அழைத்துவர இராஜதந்திர நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி, நற்பிட்டிமுனை பகுதியில் இன்று (20) விசேட கையெழுத்து சேகரிப்பும் கவனயீர்ப்பு போராட்டமும் முன்னெடுக்கப்பட்டன.
சமூக ஊடகப் பதிவொன்றைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட அனோஜனுக்கு ஆரம்பத்தில் 5 வருட சிறைத்தண்டனையும் 3 மில்லியன் சவூதி ரியால் அபராதமும் விதிக்கப்பட்டிருந்த நிலையில், மேன்முறையீட்டின் அடிப்படையில் இத் தண்டனை மரண தண்டனையாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகக் குடும்பத்தினருக்குத் தகவல் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், இது தொடர்பான எழுத்துமூலமான உத்தியோகபூர்வ தீர்ப்பு இதுவரை இலங்கை வெளிவிவகார அமைச்சுக்குக் கிடைக்கப்பெறவில்லை.
இப் பின்னணியில், அனோஜனின் உயிரைப் பாதுகாத்து அவரைப் பாதுகாப்பாக நாட்டிற்கு அழைத்து வருவதற்கு இலங்கை அரசாங்கம் அவசர உயர்மட்ட இராஜதந்திர நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனக் கோரி இக்கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
“ஒரு உயிரைக் காப்போம் - மனிதாபிமானத்துடன் கரம் கொடுப்போம்” என்ற தொனிப்பொருளில் இடம்பெற்ற இக் கவனயீர்ப்புக்கு இன, மத, மொழி வேறுபாடுகளைக் கடந்து நற்பிட்டிமுனை மக்கள் உட்படப் பெருந்திரளான பொதுமக்கள் ஆதரவு வழங்கினர்.