27 அரசு அதிகாரிகளுக்கு 12 கோடி இழப்பீடு!
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நல்லாட்சிக் காலத்தில் அரசியல் பழிவாங்கலுக்கு உள்ளானதாக கூறி இருபத்தேழு அரச அதிகாரிகளுக்கு பன்னிரெண்டு கோடி ரூபா நட்டஈடு வழங்குவதற்கான அமைச்சரவை ஆவணத்தை முன்வைக்க பிரதமர் அலுவலகம் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் மே மாதம் 9ஆம் திகதிக்கு முன்னர் இந்தப் பத்திரத்தை சமர்ப்பிக்கவிருந்த நிலையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அலுவலகம் இந்த ஆவணம் மற்றும் தொகையை மதிப்பீடு செய்துள்ளது.
இந்நிலையில் தற்போதைய பிரதமர் தினேஷ் குணவர்தன பதவியேற்றதன் பின்னர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்திற்கு சென்ற போதே இந்த ஆவணம் மீண்டும் கையளிக்கப்பட்டுள்ளது.
இந்த இழப்பீட்டு ஆவணத்தை அமைச்சரவைக்கு அனுப்ப பிரதமர் அலுவலகம் தயாராக இருந்தாலும், பிரதமர் அலுவலக அதிகாரிகள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
எனினும் , அமைச்சரவை பத்திரத்தை விரைவில் சமர்ப்பிக்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் குழுவொன்று பிரதமருக்கு அழுத்தம் கொடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஒரு அதிகாரிக்கு ஏழு இலட்சம் ரூபாயிலிருந்து இருநூற்று ஐம்பது இலட்சம் ரூபாய் வரையிலான தொகைக்கு உரிமையுள்ளது. மேலும் பதினொரு அரசு அதிகாரிகளுக்கான இழப்பீடு இதுவரை மறுக்கப்பட்டுள்ளது.
அவர்கள் மீதான வழக்குகள் முடிவடையாததே இதற்குக் காரணம் என கூறப்படுகின்றது. அதேவேளை நட்டஈடு பெறவுள்ள அதிகாரிகளில் முன்னாள் ஜனாதிபதி செயலாளர்களான லலித் வீரதுங்க மற்றும் காமினி செனரத் ஆகியோர் முன்னிலையில் உள்ளனர்.
இழப்பீடு வழங்கப்படவுள்ள அதிகாரிகள் மற்றும் தொகை விபரம் ,
முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க (ரூ. 150 இலட்சம்)
முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத் (ரூ. 240 இலட்சம்)
இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் முகாமைத்துவ பணிப்பாளர் பியதாச குடபாலகே (ரூ. 24 இலட்சம்)
அனுஷ பல்பிட, தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் (ரூ. 140 இலட்சம்)
நீதவான் திலின கமகே (ரூ. 60 இலட்சம்)
உள்நாட்டலுவல்கள் அமைச்சின் முன்னாள் செயலாளர் நீல் பண்டார ஹபுஹின்ன (ரூ. 59 இலட்சம்)
திவி நகும அபிவிருத்தி திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் கித்சிறி ரணவக்க (48 இலட்சம்)
முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கர்ணகொடவின் (ரூ. 42 இலட்சம்) பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளன.
அதேவேளை , முன்னாள் ஜனாதிபதி செயலாளர் காமினி செனரத் இந்த இழப்பீட்டை பெற்றுக்கொள்ள மறுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.