12 கோடி ரூபாய் இலஞ்சம் பெற்ற விவகாரம் ; சந்தேகநபர்களின் சொகுசு வீடு மற்றும் வாகனங்கள் முடக்கம்
குற்றவாளி ஒருவருக்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக, அவரது மனைவியிடமிருந்து 12 கோடி ரூபாய் பணத்தை இலஞ்சமாகப் பெற்றுக்கொண்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், சந்தேகநபர் ஒருவருக்குச் சொந்தமான சொகுசு வீடு முடக்கப்பட்டுள்ளது.
சரித் அபேசிங்க என்பவருக்குச் சொந்தமான குறித்த சொகுசு வீடு முடக்கப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு இன்று (16) கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் அறிவித்துள்ளது.

இதேவேளை, இந்தச் சம்பவத்தின் இரண்டாவது சந்தேகநபரான சட்டத்தரணி ரகித ராஜபக்சவுக்குச் சொந்தமான பல சொகுசு வாகனங்கள் மற்றும் நான்கு வங்கிக் கணக்குகள் அண்மையில் மேல் நீதிமன்றத்தினால் முடக்கப்பட்டுள்ளதாகவும் ஆணைக்குழு நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், மூன்றாவது சந்தேகநபரான வருண ஹேந்திகே அருண சதுரங்க என்பவரின் மனைவி மற்றும் தந்தைக்குச் சொந்தமான இரண்டு வாகனங்களும் முடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
12 கோடி ரூபாய் இலஞ்சப் பணம் பெற்றுக்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றது.