11ம் தர தவணைப் பரீட்சை வினாத்தாள்கள் வெளியானதாக அறிவிப்பு ; பெரும் குழப்பத்தில் கல்வி அதிகாரிகள்
வடமத்திய மாகாணத்தில் உள்ள அரச பாடசாலைகளின் 11ம் தர தவணைப் பரீட்சை தொடர்பான மேலும் இரண்டு வினாத்தாள்கள் வெளியாகியுள்ளன.
விஞ்ஞானம் மற்றும் ஆங்கில பாடங்கள் தொடர்பான வினாத்தாள்கள் இவ்வாறு வெளியாகியுள்ளதாக வடமத்திய மாகாண கல்விச் செயலாளர் சிறிமெவன் தர்மசேன தெரிவித்தார்.
“இன்றைய பரீட்சை வினாத்தாள் வெளியானதாக நேற்று நள்ளிரவு முதலாவது செய்தி கிடைத்தது. அதன்படி இன்று காலை அந்த பரீட்சை நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க முடிவு செய்தோம்.
இன்று பிற்பகலில், நாளை மற்றும் நாளை மறுநாள் திட்டமிடப்பட்ட விஞ்ஞானம் மற்றும் ஆங்கில வினாத்தாள்கள் வெளியானதாக தகவல் கிடைத்தது."
இந்த வினாத்தாள்கள் வெளியானது தொடர்பாக அநுராதபுரம் தலைமையக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், சம்பவம் எவ்வாறு இடம்பெற்றது என்பதை கண்டறிய நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் கூறினார்.
வடமத்திய மாகாணத்தின் 11ஆம் தர தவணைப் பரீட்சை தொடர்பான சிங்கள இலக்கிய வினாத்தாள் முதலில் வெளியான நிலையில் அது சமூக வலைத்தளங்கள் ஊடாக வெளியானமை உறுதிப்படுத்தப்பட்டது.
இந்த வினாத்தாள்கள் வெளியானதை தொடர்ந்து, வடமத்திய மாகாணத்தில் உள்ள அனைத்து அரச பாடசாலைகளிலும் 11ஆம் தர பரீட்சைகளை மறு அறிவித்தல் வரை இரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.