இலங்கையில் 50 ஆண்டுகளுக்கு முன் சிறுவன் திருடிய பணம்... கோவை தொழிலதிபர் செய்த நெகிழ்ச்சி செயல்
இலங்கையில் 50 ஆண்டுகளுக்கு முன்பு பக்கத்து வீட்டொன்றில் 37 ரூபாய் 50 காசு திருடிய 10 வயது சிறுவன் தற்போது கோவையில் தொழிலதிபராக உள்ள சம்பவம் ஒன்று அச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதேவேளை, இந்த திருட்டு சம்பவம் அவரது மனதை உறுத்திய நிலையில் பணத்தை திருடிய வீட்டின் வாரிசுகளை தேடிக் கண்டுபிடித்து ரூ.3 லட்சம் திருப்பி கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை - நுவரெலியா மாவட்டத்தில் உள்ள தேயிலை எஸ்டேட்டில் சுப்பிரமணியம் என்பவர் பணியாளர்களாக இருந்துள்ளார். இவரது மனைவி எழுவாய். இவர்கள் இருவரும் 1970 ம் ஆண்டில் அங்கிருந்த வீட்டை காலி செய்தனர்.
வீடு காலி செய்தபோது உதவிக்காக பக்கத்து வீட்டை சேர்ந்த 10 வயது சிறுவன் ரஞ்சித்தை அழைத்தனர். ரஞ்சித் அந்த தம்பதிக்கு உதவி செய்தார்.
இச்சமயத்தில் தலையணைக்கு அடியில் 37 ரூபாய் 50 காசு இருந்ததை ரஞ்சித் பார்த்துள்ளார். பின்னர் தனது குடும்பம் வறுமையில் வாடுவதை நினைத்த அவர் வீட்டின் உரிமையாளர்களுக்கு தெரியாமல் ரூ.37.50யை திருடி வைத்து கொண்டார். அதன்பிறகு 1977ம் ஆண்டில் தனது 17 வயதில் ரஞ்சித் பிழைப்பு தேடி தமிழகம் வந்துள்ளார்.
கோவையில் அவர் பல்வேறு பணிகளை செய்தார். வறுமையில் இருந்து மெல்ல மெல்ல மீண்டு தற்போது தொழிலதிபராக உள்ளார். ரஞ்சித் தற்போது கோவையில் கேட்டரிங் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
இருப்பினும் ரஞ்சித்திற்கு சுப்பிரமணியம் - எழுவாய் தம்பதி வீட்டில் 37.50 காசு திருடிய சம்பவம் உறுத்தி கொண்டே இருந்தது. எப்படியாவது அந்த பணத்தை கொடுத்து விட வேண்டும் என்று அவர் முடிவு செய்தார்.
இதையடுத்து சுப்பிமணியம் - எழுவாய் தம்பதி பற்றி அவர் விசாரித்து வந்துள்ளார். அப்போது அந்த தம்பதி உயிரிழந்திருப்பது தெரியவந்தது. மேலும் அவர்களுக்கு 3 மகன்கள், ஒரு மகள் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அவர்களிடம் பணத்தை திரும்ப கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்தார்.
அண்மையில் இலங்கை சென்ற ரஞ்சித் அங்கிருந்த சுப்பிரமணியம் - எழுவாய் தம்பதியின் 3 மகன்களின் குடும்பத்துக்கு தலா ரூ.70 ஆயிரம் வழங்கினார். அத்தோடு புத்தாடைகளும் வாங்கி கொடுத்தார்.
மேலும், சுப்பிரமணியம் - எழுவாய் தம்பதியின் மகள் செல்லம்மாள் திருச்சியில் இருப்பதை அறிந்த ரஞ்சித் அங்கு சென்று அவருக்கு புத்தாடை வழங்கியதோடு ரூ.70 ஆயிரத்தை வழங்கினார்.
இப்படியாக இலங்கையில் திருடிய 37.50 ரூபாய்க்காக 50 ஆண்டுகள் கழித்து பணத்தை இழந்த தம்பதியின் வாரிசுகளுக்கு ரூ.3 லட்சத்தை ரஞ்சித் வழங்கிய சம்பவம் நெகிழ வைத்துள்ளது.
இதற்கிடையே தான் கோவையில் உள்ள ரஞ்சித்தை, சுப்பிரமணியம் - எழுவாய் தம்பதியின் பேத்தி பவானி சந்தித்து நன்றி கூறினார்.
அப்போது அவர், ‛‛அவர் (ரஞ்சித்) வீட்டில் காசு எடுத்ததாகவும், அதனை திரும்ப தருவதாகவும் கூறினார். அதை கேட்டு நான் அதிர்ச்சி அடைந்துவிட்டேன். இந்த காலத்தில் இப்படியொரு ஆளா? ரொம்ப சந்தோஷமாக இருந்தது'' என்றார்.
இதுதொடர்பாக ரஞ்சித் கூறுகையில்,
‛‛நான் பணத்தை அவர்களின் வாரிசுகளுக்கு கொடுத்த தருணம் எதிர்பாராத ஒன்று. மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
ஒருவருக்கொருவர் பார்த்தபோது பண சந்தோஷத்தை விட.. மன சந்தோஷம் அதிகமாக இருந்தது. அதனை வார்த்தைகளால் விவரிக்கவே முடியாது. எனக்கு கடன் என்று யாரிடமும் இருக்க கூடாது. இதனால் தான் பணத்தை தேடி கொண்டு போய் கொடுத்தேன்'' என்றார்.