யாழ். செம்மணி புதைகுழி அகழ்வில் பச்சிளம் குழந்தை உட்பட 10 என்புக்கூடுகள் மீட்பு
யாழ்ப்பாணம், செம்மணி - சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இருந்து பச்சிளம் குழந்தை மற்றும் இரண்டு சிறார்கள் உள்ளிட்ட 10 மனித என்புக்கூட்டுத் தொகுதிகள் இன்று (15) முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணியின் 25ஆவது நாள் பணிகள் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டன.

இதன்போது, புதிதாக மேலும் 5 மனித என்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டதுடன், ஏற்கனவே வெளிப்பட்டிருந்த என்புக்கூடுகளில் சிறுவர்கள் மற்றும் பச்சிளம் குழந்தையின் என்புக்கூடுகள் உள்ளடங்கலாக 10 பேரினது என்புக்கூட்டுத் தொகுதிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டன.
இன்றைய தினம் மீட்கப்பட்ட மனித என்புக்கூடுகளில் பெரும்பாலானவை உடைந்த நிலையிலும், சீரற்ற முறையிலுமே காணப்பட்டது.
இதற்கமைய, செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இதுவரையான அகழ்வுப் பணிகளின் போது மொத்தமாக 360 மனித என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவற்றில் 351 என்புக்கூடுகள் புதைகுழியிலிருந்து முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டு நீதிமன்றப் பாதுகாப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.