கடந்த ஆட்சியில் கைதானவர்கள் 100 மில்லியன் ரூபா இழப்பீடு கோரி வழக்கு தாக்கல்
கடந்த ஆட்சியில் கைதான தந்தை மற்றும் மகன் 100 மில்லியன் ரூபா இழப்பீடு கோரி தாக்கல் செய்த அடிப்படை மனித உரிமைகள் மனுவை விசாரிக்க உயர்நீதிமன்றம் நேற்று (20) அனுமதி வழங்கியது.
‘யுக்திய’ நடவடிக்கையின்போது போதைப்பொருள் வைத்திருந்ததாகக் கூறி எந்தவொரு நியாயமான காரணமும் இல்லாமல் தங்களைக் கைதுசெய்து தடுத்து வைத்ததால் கிராண்ட்பாஸ் பொலிஸ் நிலையத்தால் தங்கள் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டதற்காக கூறி அவர்கள் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.

மூன்று பேர் கொண்ட உயர்நீதிமன்ற அமர்வு
கிராண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்த முகமது சுலைமான் மற்றும் இப்தான் ரஹ்மத்துல்லா ஆகிய இரு தொழிலதிபர்களால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.
மனுவின் அடிப்படை சமர்ப்பணங்களை கண்டறிந்த பின்னர், நீதியரசர்கள் யசந்த கோதாகொட, சோபித ராஜகருணா மற்றும் மேனகா விஜேசுந்தர ஆகியோர் அடங்கிய மூன்று பேர் கொண்ட உயர்நீதிமன்ற அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்தது.
கடந்த ஆண்டு மார்ச் 14ஆம் திகதி, யுக்திய நடவடிக்கையின்போது, பிரதிவாதிகள் தாங்கள் வசித்துவந்த அடுக்குமாடி குடியிருப்பில் நுழைந்து, தாக்கி, தங்களை கைதுசெய்து பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றதாக மனுதாரர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் கூறுகின்றனர்.
பிரதிவாதிகளின் இந்தச் செயலால் தங்கள் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பளிக்கவும் இதற்காக 100 மில்லியன் ரூபா இழப்பீட்டை வழங்க உத்தரவிடவும் மனுதாரர்கள் உயர்நீதிமன்றத்தை மேலும் கோரியுள்ளனர்.
பாதிக்கப்பட்ட மனுதாரர்கள் சார்பாக சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா ஆஜரான நிலையில் மனுவை விசாரிக்க உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.