போதைப்பொருள் குற்றச்சாட்டு ; உறுப்பினரை தூக்கி எறிந்த சஜித் பிரேமதாச
தென்கடல் பகுதியில் இடைமறிக்கப்பட்ட மீன்பிடிப் படகில் கண்டுபிடிக்கப்பட்ட பெருமளவிலான போதைப்பொருட்களுடன் தொடர்புடையதாகக் கைது செய்யப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தி உறுப்புரிமை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
சந்தேக நபருக்கு எதிராக கட்சி நடவடிக்கை எடுத்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் வர்த்தகத்தை கடுமையாக எதிர்க்கிறது
தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச,
வியாழக்கிழமை (20) போதைப்பொருள் தொடர்பாகக் கைது செய்யப்பட்டதில் குற்றம் சாட்டப்பட்ட குறித்த நபரின் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்புரிமை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் உரிய நடவடிக்கை எடுப்பதற்காக தனியான விசாரணையொன்று ஆரம்பிக்கப்படும் என்றும் எதிர்க்கட்சி தலைவர் தனது பதிவில் மேலும் தெரிவித்துள்ளார்.
அதோடு ஐக்கிய மக்கள் சக்தி ஒரு கட்சியாக, போதைப்பொருள் வர்த்தகத்தை கடுமையாக எதிர்க்கிறது.
இது எமது சமூகத்திற்கு ஒரு புற்றுநோயாகும். இந்த சட்டவிரோத, வெறுக்கத்தக்க செயல்பாட்டில் ஈடுபடுபவர்களுக்கு அதிகபட்ச தண்டனையை வழங்குவதற்காக எமது சட்டங்களை மறுசீரமைக்கப்பட வேண்டும் என்பதை நாம் உறுதியாக நம்புகிறோம் எனவும் சஜித் குறிப்பிட்டுள்ளார்.
பன்னல பிரதேசத்தைச் சேர்ந்த ஐக்கிய மக்கள் சக்தியின் உள்ளுராட்சிமன்ற வேட்பாளர் ஒருவர் போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கை தொடர்பில் கைது செய்யப்பட்டதை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியக அதிகாரிகள் உறுதிப்படுத்திய பின்னரே சஜித் பிரேமதாச இந்தக் கருத்துக்களைத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.