தடுத்து வைக்கப்பட்டிருந்த இளைஞன் உயிரிழப்பு; பொலிஸ் நிலையத்தில் சித்திரவதையா?
வெலிக்கடை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இளைஞர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் நுகேகொட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இராஜகிரிய பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் நுழைந்ததாக கூறி அப்பகுதி மக்கள் 119 என்ற பொலிஸ் அவசர பிரிவுக்கு அழைத்து உயிரிழந்த இளைஞனை பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.
பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்ட இளைஞன் முல்லேரிய மனநல வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் நுகேகொட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழு கோரிக்கை
இளைஞன் ஒருவர் மர்மமாக உயிரிழந்த சம்பவம் குறித்து உடனடியாக விசாரணை நடத்துமாறு கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழு கோரிக்கை விடுத்துள்ளது.
சிறைக் கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழுவின் சட்டத்தரணியும் நிர்வாக பணிப்பாளருமான சேனக பெரேரா, அந்த நபர் பொலிஸ் நிலையத்தில் இருந்தபோது சித்திரவதை செய்யப்பட்டதன் விளைவாக அவர் உயிரிழந்ததாகவும் குற்றம் சாட்டினார்.
புதன்கிழமை (2) வெலிக்கடை பொலிஸ் நிலையத்திற்குச் சென்ற அவரது தாயார், தனது மகனின் ஆடைகள் கழற்றப்பட்டதாகக் கூறினார். கைது செய்யப்பட்டபோது அவர் அணிந்திருந்த கால்சட்டை ஒரு குப்பைத் தொட்டியில் கண்டெடுக்கப்பட்டதாகக் கூறினார்.
இது குறித்து விசாரித்தபோது, அந்த இளைஞர் தற்கொலைக்கு முயன்றதாக பொலிசார் தாயாரிடம் கூறியதாகக் கூறப்படுகிறது. இளைஞனின் உயிரிழப்பு தொடர்பில் விரைவான விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
காவலில் இருந்தபோது அந்த நபரின் மரணம் குறித்து விசாரணை நடந்து வரும் நிலையில், உயிரிழந்த இளைஞனின் சடலம் பிரேத பரிசோதனை செய்யப்பட உள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.