மைதான கழிப்பறையில் பிரசவம் ; கர்ப்பம் என்பது தெரியாமலேயே குழந்தை பெற்றெடுத்த இளம் பெண்
இங்கிலாந்தின் சஃபோல்க்கில் உள்ள கால்பந்து மைதானத்தின் கழிப்பறையில் 29 வயது பெண் ஒருவர் குழந்தையைப் பெற்றெடுத்த செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் தான் கர்ப்பமாக இருப்பது தனக்குத் தெரியாது என்றும் அவர் கூறுகிறார். சார்லோட் ராபின்சன் என்ற அந்தப் பெண், தன்னுடைய குழந்தையை "என் வாழ்க்கையின் மிகப்பெரிய அதிர்ச்சி" என்று விவரிக்கிறார்.
பிரசவ வலி
கால்பந்து போட்டியை ராபின்சன் பார்வையிட்டபோது, திடீரென வயிறு வலி ஏற்பட்டதால் அருகிலிருந்த கழிப்பறைக்கு சென்றார். ஆனால் சிறிது நேரத்திலேயே அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டு பச்சிளம் குழந்தையின் தலை வெளியே நீண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
29 வார கர்ப்பமாக இருந்தபோதிலும், ராபின்சன் அதுகுறித்த எந்த அறிகுறிகளும் இன்றி இருந்துள்ளார். அவரது வயிறும் பெரிதானது போலில்லை; வயிற்றுக்குள் எந்த அசைவையும் அவர் உணரவில்லை. இதற்கு நடுவே சமீபத்தில் லண்டனுக்குச் சென்று தனது வழக்கமான அலுவலக வேலையையும் செய்துள்ளார்.
மைதானத்தில் உள்ள கழிப்பறையில் குழந்தையை பெற்றெடுத்த சார்லோட், இந்த தகவலை தனது கணவர் மெக்காலே மற்றும் மாமியாரிடம் சொல்வதற்காக அவர்களை தொடர்பு கொள்ள முயற்சித்த போது போதிய சிக்னல் இல்லாமல் சிரமப்பட்டுள்ளார்.
செய்தி அறிந்து வந்த மெக்காலே, பெண்கள் கழிப்பறைக்குள் நுழைய தயங்கியபடி வெளியே காத்திருந்தார். கழிப்பறையில் போதிய துணிகள் இல்லாத காரணத்தினால், பிறந்த குழந்தையை அங்கிருந்த கால்பந்து சட்டையால் சுற்றி வைத்திருந்தார் சார்லோட்.
கர்ப்பமாக இருப்பதை அறியாத இதுபோன்ற ரகசிய கர்ப்பங்கள், இங்கிலாந்தில் ஆண்டுதோறும் 2,500 பிறப்புகளில் ஒன்றைப் பாதிக்கின்றன. இவை ஒழுங்கற்ற மாதவிடாய், சமீபத்திய பிரசவம் அல்லது PCOS போன்ற நிலைமைகள் காரணமாக ஏற்படலாம்.