நண்பனை கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய 29 வயது இளைஞர்
காலி, ஹிக்கடுவை பகுதியில் கொடுக்கல் வாங்கல் தொடர்பான தகராறு காரணமாக 28 வயதுடைய தனது நண்பரைக் கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணை
வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தாமை தொடர்பில் இருவருக்கும் இடையே நீண்டகாலமாக முரண்பாடு நிலவி வந்துள்ளதாகப் பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், நேற்று இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றியதைத் தொடர்ந்து, ஆத்திரமடைந்த 29 வயதுடைய சந்தேகநபர் தன்னிடமிருந்த கூரிய கத்தியால் தனது நண்பரைச் சரமாரியாகக் குத்தியுள்ளார்.
கத்திக்குத்துத் தாக்குதலில் பலத்த காயமடைந்த 28 வயதுடைய இளைஞர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உடனடியாக வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து, கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் அங்கிருந்து தப்பிச் சென்று தலைமறைவாகியுள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், தலைமறைவாகியுள்ள சந்தேகநபரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் ஹிக்கடுவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.