யாழில் வழக்கு விசாரணைக்கு சென்றவருக்கு வழிமறித்து வாள்வெட்டு
யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறை வீதியில் இடம்பெற்ற வாள்வெட்டுத் தாக்குதலில் தீவக சிவில் அமைப்பின் உப தலைவர் கருணாகரன் குணாளன் பலத்த காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் இன்று (19) மண்கும்பான் ஆலயத்துக்கும் அராலிச் சந்திக்கும் இடையில் இடம்பெற்றுள்ளது.
பொலிஸார் விசாரணை
ஊர்காவற்றுறை நீதிமன்றில் வழக்கு விசாரணைக்காக முன்னிலையாவதற்கு யாழ்ப்பாணத்திலிருந்து ஊர்காவற்றுறை நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்தபோதே, இனந்தெரியாத மூவர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து வாள்வெட்டுத் தாக்குதலை நடத்தியுள்ளது.

புங்குடுதீவில் இடம்பெற்ற சட்டவிரோத மாடுகடத்தல் சம்பவம் மற்றும் படுகொலை செய்யப்பட்ட பேருந்து உரிமையாளர் அகிலன் கொலைச் சம்பவம் தொடர்பான வழக்கு இன்று ஊர்காவற்றுறை நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவிருந்தது.
குறித்த கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை அடையாளம் காட்டியமை தொடர்பான வழக்கில் முன்னிலையாவதற்காகவே குணாளன் ஊர்காவற்றுறை நோக்கிச் சென்றுகொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது அவர் மீது நடத்தப்பட்ட வாள்வெட்டுத் தாக்குதலில் கையில் பலத்த காயம் ஏற்பட்டதுடன், அவரது மூன்று விரல்களும் துண்டிக்கப்பட்டுள்ளன.
தாக்குதலில் காயமடைந்த அவர் உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.