திருமண வயதை 16 ஆகக் குறைக்க அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் ; இலங்கை உலமா கட்சி கோரிக்கை
நக்கிள்ஸ் சம்பவத்துடன் தொடர்புடைய 15 வயது சிறுமியின் நலன்புரி மற்றும் தொடர்ச்சியான கல்வியை உறுதிப்படுத்தும் நோக்கில், பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு மாதாந்தக் கொடுப்பனவு வழங்க எடுத்துள்ள தீர்மானத்தை இலங்கை உலமா கட்சி வரவேற்றுள்ளது.
அதேவேளை, இலங்கையில் திருமணத்திற்கான சட்டபூர்வ வயதான 18 வயதை மாற்றி, 16 வயதை விருப்பத் தெரிவாகக் கருதுவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அக்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பில் இலங்கை உலமா கட்சியின் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்தக் கருத்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

அந்த அறிக்கையில், 15 வயதுச் சிறுமிக்கு அரசாங்கம் நிதியுதவி வழங்க முன்வந்துள்ளமை வரவேற்கத்தக்கது எனக் குறிப்பிட்டுள்ள அவர், சிறுமியின் குழந்தையின் எதிர்காலம் மற்றும் சமூகப் பாதுகாப்பு தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
18 வயதுக்கு முன்னர் திருமணம் செய்வதற்கான சட்டத் தடை காரணமாக, சிறுமியின் குழந்தை எதிர்காலத்தில் சமூக ரீதியான சவால்களை எதிர்கொள்ள நேரிடலாம் எனவும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தற்போதைய சமூக மற்றும் இணையச் சூழலில் சிறுவர்களிடையே இளம் வயதிலேயே காதல் உறவுகள் ஏற்படுவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், திருமண வயது தொடர்பான சட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இதன்படி, தற்போதுள்ள 18 வயது திருமண வயதை மாற்றி, 16 வயதைத் திருமணத்திற்கான விருப்பத் தெரிவாக மாற்றுவது குறித்து அரசாங்கம் சிந்திக்க வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.
இதேவேளை, ஒரு பெண் பருவமடைந்தவுடன் அல்லது ஆண் வயதுக்கு வந்தவுடன் கட்டாயம் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என இஸ்லாம் வலியுறுத்தவில்லை என்றும், அதனை விருப்பத் தெரிவாகவே வழங்குவதாகவும் அவர் தனது அறிக்கையில் விளக்கியுள்ளார்.
திருமண வயது தொடர்பான சட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவரப்படாவிட்டால், சட்ட அச்சம் காரணமாகப் பிறக்கும் குழந்தைகள் கைவிடப்படும் சம்பவங்கள் தொடரக்கூடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
எனினும், சிறுவர் பாதுகாப்பு, குழந்தைகளின் உரிமைகள், கல்வி மற்றும் இளவயது கர்ப்பம் தொடர்பான சட்ட மற்றும் சமூகப் பிரச்சினைகள் குறித்து விரிவான கவனம் செலுத்தப்பட வேண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.