கூடாரமிட்டு தங்கியிருந்த இளம் காதல் ஜோடி: சுற்றுலா வழிகாட்டி இருவருக்கு நேர்ந்த கதி!
பதுளை - கொஸ்லாந்தை உடதியலும பகுதியில் இளம் காதல் ஜோடிக்கு அனுமதியின்றி இரவைக் கழிக்க இடம் வழங்கிய சுற்றுலா வழிகாட்டிகள் இரண்டு பேரை இம்மாதம் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க பண்டாரவளை நீதவான் திருமதி கே.ஜீவராணி உத்தரவிட்டுள்ளார்.
ஹப்புத்தளை மற்றும் பூனாகலை பிரதேசங்களைச் சேர்ந்த 24 மற்றும் 33 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவது,
கடந்த 11ஆம் திகதி பதுளை - கொஸ்லாந்தை உடதியலும பகுதியில் இரவுப் பொழுதை கழிப்பதற்காக கூடாரம் அமைத்து தங்கிய போது யானை தாக்குதலுக்குள்ளாகி இளம் காதல் ஜோடியில் யுவதி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் 23 வயதான கவிசா இயூஜின் என்ற யுவதியே உயிரிழந்துள்ளார்.
இதேவேளை குறித்த சம்பவத்தில் காயமடைந்த பெண்ணின் காதலன் தற்போது தியத்தலாவ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
அனுமதிப்பத்திரம் இன்றி சுற்றுலா வழிகாட்டிகளாக பணியாற்றிய இருவரை கொஸ்லந்த பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைது செய்து பண்டாரவளை நீதவான் நீதிமன்றில் நேற்று முன்நிலைப்படுத்திய நிலையில் நீதிமன்றம் இவ்வாறு உத்தரவு வழங்கியுள்ளது.