இலங்கை வந்த இளம் சீன வர்த்தகர்கள் அதிரடி கைது
சீனத் தயாரிப்பு சிகரெட்டுகளை சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டு வந்த மூன்று சீனப் பிரஜைகள் இன்று வெள்ளிக்கிழமை (17) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 23 மற்றும் 25 வயதுடைய வர்த்தகர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

சுங்க விசாரணைகள்
சந்தேக நபர்கள் இன்று காலை 7.50 மணியளவில் துபாயிலிருந்து 'ஃப்ளை துபாய்' நிறுவனத்திற்குச் சொந்தமான FZ-579 என்ற விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
அவர்களது பயணப் பொதிகளைச் சோதனையிட்டபோது, அவற்றுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 69 இலட்சம் ரூபா பெறுமதியான 46,000 சிகரெட்டுகள் அடங்கிய 230 சிகரெட் கார்ட்டூன்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
இது தொடர்பான சுங்க விசாரணைகளின் பின்னர், சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட அனைத்து சிகரெட்டுகளையும் அரசுடைமையாக்க அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
மேலும், கைதான மூவருக்கும் தலா 150,000 ரூபா வீதம் மொத்தம் 450,000 ரூபா அபராதம் விதிக்க சுங்க அதிகாரிகள் தீர்ப்பளித்துள்ளனர்.