இலங்கையில் இளைஞர்கள் தொடர்பில் வெளியான கவலை தரும் தகவல்
சுவையூட்டப்பட்ட பாக்கு சார்ந்த உற்பத்திகளை உட்கொள்வதன் காரணமாக, பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் வாய் புற்றுநோய் மற்றும் ஆரம்பக்கட்ட வாய் புற்றுநோய் நிலைகளுக்கு ஆளாகும் போக்கு அதிகரித்து வருவதாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பல் மருத்துவ பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் ஷயாம பன்னேஹக்க தெரிவித்துள்ளார்.
தற்போது நாட்டில் வாய் மற்றும் அது சார்ந்த புற்றுநோய்களினால் தினமும் மூவர் உயிரிழப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அபாயகரமான நிலைமை
நாட்டில் வேகமாக அதிகரித்து வரும் வாய் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிதல், தடுப்பதுடன் புகையிலை, பாக்கு மற்றும் மதுபானப் பயன்பாட்டின் அபாயகரமான நிலைமை குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த தூதுவர்களை நியமிக்கும் நிகழ்வொன்றிலேயே பேராசிரியர் இதனைத் தெரிவித்தார்.
பேராதனைப் பல்கலைக்கழக பல் மருத்துவ பீடத்தின் வாய் புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வு, கடந்த ஞாயிற்றுக்கிழமை (11) பல் மருத்துவ பீடக் கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது.
அங்கு தொடர்ந்துரையாற்றிய பீடாதிபதி பேராசிரியர் ஷ்யாம பன்னேஹக்க மேலும் தெரிவிக்கையில், வாய் புற்றுநோயானது இந்நாட்டின் ஒரு தேசிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.
இலங்கையில் ஏற்படும் அனைத்துப் புற்றுநோய்களிலும் இது இரண்டாவது இடத்திலும், ஆண்களுக்கு ஏற்படும் புற்றுநோய்களில் முதலாவது இடத்திலும் உள்ளது. மேலும் வெற்றிலைச் மெல்லுதலில் அடங்கியுள்ள கூறுகளில் பிரதான புற்றுநோய் காரணியாக பாக்கு அடையாளம் காணப்பட்டுள்ளது. அடுத்ததாக புகையிலை காணப்படுகிறது. இவை இரண்டும் சேரும் போது உருவாகும் கலவை மிகவும் ஆபத்தானது.
தற்போது சந்தையில் பல்வேறு சுவையூட்டப்பட்ட பாக்கு உற்பத்திகள் பிரபல்யமடைந்து வருகின்றன. வயோதிபர்களை விட பாடசாலை மாணவர்களும் இளைஞர்களுமே இவற்றை அதிகம் பயன்படுத்துகின்றனர்.
இதனால், அவர்கள் வாய் புற்று நோய்க்கும் அதன் ஆரம்பக்கட்ட அறிகுறிகளுக்கும் ஆளாவதாக ஆராய்ச்சிகள் மற்றும் வைத்தியசாலை அறிக்கைகள் உறுதிப்படுத்துகின்றன. பாடசாலைகளைச் சுற்றி இவ்வாறான பாக்கு உற்பத்திகளை விற்பனை செய்யும் கடைகள் அதிகளவில் காணப்படுகின்றன.
கடந்த காலத்தில் இவ்வாறான பாதிப்புகளுக்கு உள்ளான பல பாடசாலை மாணவர்கள் பேராதனை பல் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
புகையிலை அடங்கிய வெற்றிலை விற்பனையைத் தடை செய்து சில வருடங்களுக்கு முன்னர் அரசாங்கம் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டிருந்தது. சட்டத்தை சரியாக நடைமுறைப்படுத்தினால் இவ்வாறான பொருட்களை விற்பனை செய்பவர்களைக் கைது செய்ய வேண்டும். அத்துடன் அரசு நிறுவனங்களுக்குள் வெற்றிலை மெல்லுவதும் தடை செய்யப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.