சிறை அதிகாரிகளை மிரள வைத்த பெண் ; நீண்ட காலம் அரங்கேறிய செயல் அம்பலம்
மொனராகலை சிறைச்சாலையில் தடுப்புக்காவல் சிறைக் கைதி ஒருவரைப் பார்வையிடுவதற்காக வருகை தந்த பெண் போதைப் பொருளுடன் சிறைச்சாலை அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் சிறைச்சாலை உணவகத்திற்குச் சென்று தான் கொண்டு வந்த உணவுப் பொதியையும் வேஸ்லின் போத்தலையும் கைதியிடம் ஒப்படைக்க முயன்ற வேளையில் அவரின் நடவடிக்ககைளில் சந்தேகமடைந்த சிறைச்சாலை அதிகாரிகள் குறித்த பெண்ணின் உணவுப் பொதியையும் வேஸ்லின் போத்தலையும் பரிசோதித்த போது குறித்த போத்தலில் மிகவும் நுட்பமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதைப் பொருள் கைப்பற்றப்பட்டது.

போதைப் பொருள்
உடனடியாக மொனராகலை பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து பொலிஸார் நடத்திய பரிசோதனையில் 4660 மில்லிகிராம் ஐஸ் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர் மொனராகலை வெலவத்தை பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய பெண் என அடையாளங் காணப்பட்டுள்ளார்.
இவர் போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வருபவர் என ஆரம்பக் கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
சந்தேகநபரை மொனராகலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் மொனராகலை பதில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆலோசனையின் பேரில் தலைமைப் பரிசோதகர் செனவிரத்ன தலைலையிலான குழுவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.