யாழில் நடுவீதியில் வெட்டிக்கொல்லப்பட்ட இளம் குடும்பஸ்தர் ; பொலிஸார் காட்டிய அதிரடி
யாழ்ப்பாணம் வடமராட்சி, கிராமக்கோடு சந்திக்கு அருகில் முன்பகை காரணமாக குடும்பஸ்தர் ஒருவர் வீதியில் வைத்து வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எனினும், சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் தலைமறைவாகியுள்ளார்.

முன்பகைமை
கடந்த புதன்கிழமை இரவு இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், துன்னாலை பகுதியைச் சேர்ந்த 33 வயதான ஜெயசீலன் ஜெனிதன் என்பவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
துன்னாலை பகுதியைச் சேர்ந்த இரு குழுக்களுக்கு இடையில் நீண்டகாலமாக நிலவி வந்த பகைமை காரணமாகவே இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மோட்டார் சைக்கிளில் வந்த நால்வர் அடங்கிய குழுவினர், ஜெனிதனை வழிமறித்து சரமாரியாக வெட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில், சந்தேகநபர்கள் மூவர் முல்லைத்தீவில் பதுங்கியிருப்பதாக கிடைத்த இரகசிய தகவலையடுத்து அங்கு விரைந்த பொலிஸார் அவர்களைக் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட மூவரும் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
அதேவேளை, தலைமறைவாகியுள்ள பிரதான சந்தேகநபரை கைது செய்வதற்கான தொடர் விசாரணைகளையும் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.