தேனிலவை கொண்டாட ATM அட்டை திருடிய 26 வயது யுவதி! இலங்கையில் சம்பவம்
தனது தேனிலவைக் கொண்டாடுவதற்காகத் தேவையான பணத்தைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில், வர்த்தகர் ஒருவருக்குச் சொந்தமான ATM அட்டைகளைத் திருடிய 26 வயது யுவதி ஒருவர் அத்துருகிரியப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
விசாரணைகளின் போது, குறித்த வர்த்தகரின் கட்டிட நிர்மாணப் பணித்தளத்தில் மேசனாகப் பணியாற்றிய அவரது காதலனின் திட்டம் மற்றும் அறிவுறுத்தலின் பேரிலேயே திருட்டு இடம்பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது.

வாத்துவ பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தேனிலவு
கொழும்புக்கு வரவிருந்த தனது காதலிக்கு ஒரு இரவு தங்குவதற்கு இடமளிக்குமாறு அந்த மேசன் வர்த்தகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அதற்கு வர்த்தகர், "தான் வீட்டில் தனியாக வசிப்பதால், அந்த யுவதியுடன் அவரது தாயாரும் வந்தால் மாத்திரமே தங்குவதற்கு அனுமதிக்க முடியும்" என தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, மேசன் தனது மனைவியையும் மனைவியின் தாயாரையும் வர்த்தகரின் வீட்டுக்கு அழைத்துச் சென்றுவிட்டு, வர்த்தகரின் ATM அட்டைகளைத் திருட காதலிக்கு அறிவுறுத்திவிட்டுச் சென்றுள்ளார்.
மறுநாள் காலை, இருவரும் வர்த்தகருக்குச் சொந்தமான இரண்டு ATM அட்டைகளையும் எடுத்துக் கொண்டு வீட்டிலிருந்து வெளியேறி, குறித்த மேசனைச் சந்தித்துள்ளனர்.
பின்னர், அந்த ATM அட்டைகளைப் பயன்படுத்தி முதலில் 50,000 ரூபாய் பணத்தைப் பெற்றுள்ளனர். தொடர்ந்து, இருவரும் திருமணத்தைப் பதிவுசெய்து கொண்டு, வாத்துவ பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தேனிலவைக் கொண்டாடியமை பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதற்கிடையில், வெலிகம நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த சந்தேகநபரான மேசன், திறந்த பிடியாணை ஒன்றின் அடிப்படையில் வெலிகமப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
அவரைக் கைதுசெய்த சந்தர்ப்பத்தில், அவரிடம் சட்டவிரோதப் போதைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர். கணவன் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து மாத்தறை பகுதிக்குச் சென்ற யுவதி, திருடிய ATM அட்டைகளைப் பயன்படுத்தி மீண்டும் பணத்தைப் பெற்றுள்ளார்.
அந்தப் பணத்தின் மூலம் இரண்டு கையடக்கத் தொலைபேசிகளையும் தங்க நகைகளையும் கொள்வனவு செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாகக் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை ஆரம்பித்த அத்துருகிரியப் பொலிஸார், வங்கிக் கிளைகளில் பொருத்தப்பட்டிருந்த CCTV காட்சிகளை ஆய்வுசெய்து சந்தேகநபரான யுவதியை அடையாளம் கண்டு கைது செய்தனர்.
கைதான ஹம்பாந்தோட்டை, சிரிபுரப் பகுதியைச் சேர்ந்த குறித்த யுவதி ஒரு குழந்தையின் தாய் என கூறியுள்ள பொலிஸார் மீலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.