நாடு முழுவதும் GovPay மூலம் போக்குவரத்து அபராதம் செலுத்தும் முறை விரிவாக்கம்
இலங்கையின் வீதிக்போக்குவரத்து அபராதங்களை உடனுக்குடன் செலுத்தும் Govpay டிஜிட்டல் முறைமை நாடு முழுவதும் விரிவுப்படுத்துவதுடன் விதி மீறல்களில் ஈடுபடும் சாரதிகளின் உரிமத்தை தற்காலிகமாக இரத்து செய்யும் புதிய நடவடிக்கை அறிமுகப்படுத்தபடுகிறது என போக்குவரத்துக் கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் டபிள்யூ. பி. ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார்.
Govpay டிஜிட்டல் முறைமை மூலம் போக்குவரத்துத் தண்டப்பணம் செலுத்தும் புதிய நடைமுறை மற்றும் ‘Demerit Points System’ குறித்து விளக்கமளிக்கும்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

24 மணி நேரச் சேவை
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
ஆரம்பத்தில் 10 பொலிஸ் நிலையங்களில் சோதனை முறையில் தொடங்கப்பட்ட ‘Govpay’ திட்டம், தற்போது நாடளாவிய ரீதியில் உள்ள 607 பொலிஸ் நிலையங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளதுடன், பொலிஸாருக்கு 5,000க்கும் மேற்பட்ட பிரத்யேக மொபைல் சாதனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒக்டோபர் 1 முதல், ஸ்மார்ட்போன் வசதி இல்லாத சாரதிகள் எந்தவொரு பொலிஸ் நிலையத்திற்கும் சென்று, 24 மணி நேரமும் இயங்கும் இச்சேவையைப் பயன்படுத்தித் தண்டப் பணத்தைச் செலுத்தித் தங்களது சாரதி உரிமத்தை உடனடியாக மீளப் பெற்றுக் கொள்ள முடியும்.
தபால் சேவை நிலையங்களுக்கோ அல்லது நீதிமன்றத்திற்கோ செல்ல வேண்டிய அவசியமின்றி, நேரம் மற்றும் நெருக்கடி அற்ற அபராதம் செலுத்தும் வசதி இதன் மூலம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், சாரதிகளிடையே சுய ஒழுக்கத்தை வளர்ப்பதற்காக ‘Demerit Points System’ எனும் புள்ளிகள் குறைப்பு முறையும் இத்துடன் இணைக்கப்படுகிறது.
நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ள 33 வகையான போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் போது, சாரதியின் கணக்கிலிருந்து அதற்குரிய புள்ளிகள் குறைக்கப்படும்.
தண்டப் பணம் செலுத்திய பிறகு வழங்கப்படும் பற்றுச் சீட்டு மற்றும் குறுஞ்செய்தி (SMS) மூலமாகத் தங்களுக்கு எஞ்சியுள்ள புள்ளிகள் குறித்த விபரங்களை சாரதிகள் அறிந்து கொள்ளலாம்.
தொடர்ச்சியாக தவறுகளைச் செய்து சாரதிகளின் மொத்தப் புள்ளிகளும் பூச்சிய நிலையை அடைந்தால் (0 Points), கணினி முறைமை மூலமாகவே அவர்களின் சாரதி உரிமம் தானாகத் தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்யப்படும்.
முழுவதும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளதால் இதில் மனிதத் தலையீடு அல்லது முறைகேடுகளோ செய்ய முடியாது என்றும், 80 சதவீதக்கும் அதிகமான சட்டத்தை மதிக்கும் சாரதிகளைப் பாதிப்படையச் செய்யாமல், தொடர்ச்சியாகத் தவறு செய்வோரைக் கட்டுப்படுத்தி நாட்டின் வீதி விபத்துக்கள் மற்றும் உயிரிழப்புகளைக் குறைப்பதே இத்திட்டத்தின் முதன்மை நோக்கம் ஆகும் என்றார்.