காதலனின் உதவியுடன் மூன்று திருமணங்கள் செய்த பெண்: இளைஞர்கள் பரிதாபம்
விசாகப்பட்டிணத்தை சேர்ந்த பெண் ஒருவர் தன் காதலனின் உதவியுடன் மூன்று திருமணங்களை செய்து மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
விசாகப்பட்டிணத்தை சேர்ந்த பெண் ஒருவர் மூன்று திருமணம் செய்து கணவனை ஏமாற்றி நாற்பத்தி ஐந்து லட்ச ரூபாய் பணம், லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நகைகளை சுருட்டிய விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள காஜுவாக்கா நகரைச் சேர்ந்த இளம்பெண் ரேணுகா. இவர் அதே பகுதியைச் சேர்ந்த சீனிவாஸ் என்பவரை காதலித்து வந்தார். இரண்டு பேரும் நெருங்கி பழகி ரேணுகா கர்ப்பம் தரித்தார்.
இந்த நிலையில் ரேணுகாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. ரேணுகாவை திருமணம் செய்து கொள்கிறேன் தட்டிக்கழித்து வந்த சீனிவாஸ் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் மகளின் வருங்காலத்திற்காக கொஞ்சம் பணத்தை ரேனுகாவுக்கு சீனிவாஸ் கொடுத்தார். அதன்பின் சீனிவாஸ் திடீரென்று ரேணுகாவை அழைத்து ஒரு ரகசிய திட்டத்தை நிறைவேற்ற கூறினார்.
அதன்படி ராணுவத்தில் வேலை செய்யும் தன்னுடைய சித்தி மகன் பிரகாஷ் என்பவரின் போட்டோக்கள், செல் நம்பர் ஆகியவற்றை சீனிவாஸ் ரேணுகாவுக்கு கொடுத்தார்.
சீனிவாஸ் கொடுத்த செல் நம்பர் மூலம் ரானுவத்தில் பணியாற்றும் பிரகாசை தொடர்புகொண்ட ரேணுகா அவரை தன்னுடைய காதல் வலையில் வீழ்த்தி மகளை காப்பகத்தில் விட்டுவிட்டு யாருக்கும் தெரியாமல் ரகசியமாக திருமணம் செய்து கொண்டார்.
இதனைத்தொடர்ந்து பிரசாத் ரேணுகாவை தான் பணியாற்றும் ஊருக்கு உடன் அழைத்து சென்றார். அங்கு இருந்த போது ரேணுகாவுக்கு பிரசாத் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள தங்க ஆபரணங்களை வாங்கி கொடுத்திருக்கிறார்.
அதன்பின் தனக்கு விசாகப்பட்டினத்தில் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை கிடைத்தது என்று கூறி அவரை நம்ப வைத்த ரேணுகா விசாகப்பட்டினத்திற்கு வந்தார். மீண்டும் சீனிவாசுடன் ரகசிய உறவை தொடர்ந்த ரேணுகா தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் சாய் என்பவரை வலையில் வீழ்த்தி ரகசியமாக திருமணம் செய்துக்கொண்டார்.
இதற்கிடையே தன்னுடைய தாய்க்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி மருத்துவச் செலவுகளுக்கு என்று 45 லட்ச ரூபாய் வரை பணத்தை பிரசாத் இடமிருந்து ரேணுகா பறித்துக்கொண்டார்.
சாய், ரேணுகா ஆகியோருக்கு திருமணம் நடைபெற்ற மூன்றாவது நாளில் ரேனுகா கர்ப்பமாக இருப்பதை அறிந்த சாய் அவரை விட்டு விலகினார்.
இந்த நிலையில் நடந்த மோசடிகள் முறைகேடுகள் அனைத்தையும் அறிந்த ராணுவத்தில் பணியாற்றும் பிரசாத் காஜுவாக்கா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பிரசாத் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் ரேணுகாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.