வீட்டில் எயார் ரஃபிள் துப்பாக்கி இயங்கி பெண் பலி ; பொலிஸார் விசாரணை
காலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அம்பலன்வத்தை பகுதியில் எயார் ரஃபிள் துப்பாக்கி இயங்கியதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், சம்பவம் தொடர்பில் மற்றொரு பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் நேற்று (30) மதியம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணை
எயார் ரஃபிள் துப்பாக்கி இயங்கியதில் காயமடைந்த குறித்த பெண் உடனடியாக கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எனினும், சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் தெனியாய பகுதியைச் சேர்ந்த 57 வயதுடைய பெண் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பெண், மேலும் ஒரு பெண் மற்றும் இரு ஆண்களுடன் இணைந்து அம்பலங்கொட, மவுண்ட்ஹோல்வத்தை பகுதியில் உள்ள வீடொன்றில் பணிபுரிந்து வந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதன்போது அங்கு இருந்த எயார் ரஃபிள் துப்பாக்கி இயங்கியதன் காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்த காலி பொலிஸார், அங்கு பணிபுரிந்த மற்றைய பெண்ணை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காலி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.