சீனப் பிரஜையிடம் 2 கோடி ரூபா கொள்ளை ; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
சீனப் பிரஜை ஒருவரிடமிருந்த இரண்டு கோடி ரூபா பணத்தைக் கொள்ளையடித்த சம்பவம் தொடர்பில், முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் மகன் அனுத ஜனாதித் சமரகோன் பண்டார உள்ளிட்ட ஐந்து சந்தேகநபர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு எதிர்வரும் நவம்பர் 25 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என கோட்டை நீதிவான் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
மேற்படி வழக்கு புதன்கிழமை (30) கோட்டை நீதிவான் பசன் அமரசேன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே அவர் இவ்வாறு உத்தரவிட்டார்.

விளக்கமறியல்
நேற்றைய தினம் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, குறித்த கொள்ளைச் சம்பவத்தைத் திட்டமிடுவதற்காக ஐந்தாவது சந்தேகநபர் உள்ளிட்ட ஏனைய சந்தேகநபர்கள் நடத்திய கலந்துரையாடல்கள் அடங்கிய சிசிடிவி காணொளிகள் மேலதிக பரிசோதனைகளுக்காக அரச பகுப்பாய்வாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக புலனாய்வு அதிகாரிகள் நீதிவான் முன்னிலையில் குறிப்பிட்டனர்.
இந்நிலையில், மத்திய குற்றப் புலனாய்வுப் பணியக விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட விடயங்களை பரிசீலித்த நீதிவான் இந்த வழக்கு எதிர்வரும் நவம்பர் 25 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உத்தரவிட்டார்.
இச்சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் மகன் உள்ளிட்ட ஐந்து சந்தேகநபர்களும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் மேற்படி சந்தேகநபர்கள் நேற்றைய தினம் வழக்கு விசாரணைக்காக நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தனர்.