யாழில் 2 குழந்தைகளைக் கைவிட்டுவிட்ட கள்ளக் காதலனுடன் சென்ற பெண் கைது
யாழ்ப்பாணம், அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நவக்கிரி மூலிகைத் தோட்டம் பகுதியில் தனது இரு குழந்தைகளையும் தாயாரிடம் விட்டுவிட்டு வேறொரு நபருடன் சென்றதாகக் கூறப்படும் பெண் ஒருவர், அச்சுவேலி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண்ணின் தாயார் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில், கடந்த சில மாதங்களாக பொலிஸார் அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்துள்ளனர். எனினும், அவர் தலைமறைவாக இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணை
இந்த நிலையில், குறித்த பெண் நேற்று சாவகச்சேரி பகுதியில் வைத்து அச்சுவேலி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண்ணுக்கு திருமணமாகி ஆறு வயதுடைய பெண் குழந்தை உள்ளிட்ட இரு குழந்தைகள் உள்ளதாகவும், கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் வேறொரு நபருடன் தொடர்பு ஏற்பட்டு, இரு குழந்தைகளையும் தனது தாயாரிடம் விட்டுவிட்டு சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து, குழந்தைகளின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு அச்சுவேலி பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவினரால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அதன்படி, ஆறு வயதுடைய பெண் குழந்தை கோப்பாய் பகுதியில் உள்ள சிறுவர் காப்பகம் ஒன்றில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டு கல்வி கற்று வருவதாகவும், ஆண் குழந்தை தாயாரின் பராமரிப்பில் வளர்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட பெண் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். இதன்போது பொலிஸாரினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு, அவருக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
வழக்கை விசாரித்த நீதிமன்றம் குறித்த பெண்ணை எச்சரித்ததுடன், பிணையில் எடுப்பதற்கு எவரும் முன்வராத நிலையில் அவருக்கு பிணை வழங்க மறுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அச்சுவேலி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.