இலங்கையில் 30,000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் ஆபத்தில் ; மண்சரிவு குறித்து புதிய அபாய எச்சரிக்கை
'டிட்வா' சூறாவளியைத் தொடர்ந்து நாட்டில் 30,000 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மண்சரிவு அபாயத்திற்கு முகங்கொடுத்துள்ளதாகத் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் எச்சரித்துள்ளது.
அத்துடன், இதுவரை பாதுகாப்பானவை எனக் கருதப்பட்ட பகுதிகளும் தற்போது மண்சரிவு அபாயத்துக்கு உள்ளாகக்கூடும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தொடர்ச்சியாகப் பெய்து வரும் பலத்த மழை காரணமாக, சூறாவளியால் பாதிக்கப்பட்ட பல பகுதிகளில் மண்சரிவுக்கான ஆரம்ப அறிகுறிகள் ஏற்கனவே தென்படத் தொடங்கியுள்ளதாகத் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தின் சிரேஷ்ட விஞ்ஞானி வசந்த சேனாதீர தெரிவித்துள்ளார்.

உண்மையான மண்சரிவு ஏற்படாத போதிலும், மண் மற்றும் பாறைகள் ஏற்கனவே நகர்ந்துள்ள பகுதிகளில் கனமழை தொடருமாயின், மீண்டும் மண்சரிவு அபாயம் தீவிரமடையக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சூறாவளி நிலையைத் தொடர்ந்து புதிதாக 16,793 உயர் அபாயமுள்ள குடும்பங்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும், கடந்த 15 ஆண்டுகளில் இனங்காணப்பட்ட சுமார் 15,000 குடும்பங்களுடன் சேர்த்து இந்த எண்ணிக்கை 30,000 ஐக் கடந்துள்ளதாகவும் வசந்த சேனாதீர தெரிவித்தார்.
ஏற்கனவே இனங்காணப்பட்ட குடும்பங்களில் சுமார் 5,000 குடும்பங்கள் தற்போது மீள்குடியேற்றப்பட்டு வருகின்றன.
கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என எச்சரித்துள்ள அவர், "சூறாவளிக்குக்குப் பிறகு, நாம் பாதுகாப்பானவை எனக் கருதிய இடங்கள் கூட பாதுகாப்பற்றவையாக மாறியுள்ளன" எனக் கூறினார்.

எனவே, மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் வாழும் மக்கள் கனமழை பெய்யும் சந்தர்ப்பங்களில் உடனடியாகப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அத்துடன், மண்சரிவு ஏற்படும் பகுதிகளைப் பார்வையிடவோ அல்லது காணொளி பதிவு செய்யவோ அருகில் செல்ல வேண்டாம் என்றும், அது உயிர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
சமூக வலைத்தளங்களில் உலா வரும் உறுதிப்படுத்தப்படாத தகவல்களைப் பின்பற்றாமல், அரச நிறுவனங்களால் வெளியிடப்படும் உத்தியோகபூர்வ எச்சரிக்கைகளை மட்டுமே பின்பற்றுமாறு அவர் பொதுமக்களை கோரியுள்ளார்.