யாழில் இருந்து கொழும்பு சென்ற சொகுசுப் பேருந்தில் நள்ளிரவில் நடந்த சம்பவம்! கொதித்தெழுந்த பயணி
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த சொகுசுப் பேருந்து ஒன்றில், வீதி அனுமதிப்பத்திரம் (Route Permit) இல்லாத காரணத்தால் நள்ளிரவில் காட்டுப் பகுதியில் பொலிஸாரால் நிறுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் பயணி ஒருவர் தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
குறித்த பயணி அண்மையில் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி இரவு நேரப் பயணத்துக்காக ஆசனங்களை முன்பதிவு செய்து பயணித்துள்ளார்.

பயணிகளிடம் பொய் கூறுமாறு வற்புறுத்தல்
எனினும், நள்ளிரவு 2.00 மணியளவில் கெப்பிட்டிகொல்லாவ அருகிலுள்ள காட்டுப் பகுதியில் பேருந்து நீண்ட நேரமாக நிறுத்தப்பட்டு , பொலிஸார் சோதனையிட்ட போது, "திருகோணமலைக்கு உல்லாசப் பயணம் செல்வதாகக் கூறுமாறு" பேருந்தில் இருந்த பயணிகளிடம் பொய் கூறுமாறு வற்புறுத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
பொலிஸார் மேற்கொண்ட பரிசோதனையில், அந்தப் பேருந்துக்கு உரிய வீதி அனுமதிப்பத்திரம் (Route Permit) இல்லை என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து பொலிஸார் அப்பேருந்தை மீண்டும் வவுனியாவுக்கு அனுப்பி வைத்து, பயணிகளுக்கு மாற்றுப் போக்குவரத்து ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.
இறுதியில் மற்றுமொரு பேருந்து மூலம் பயணிகள் கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்ட போதிலும், போதிய ஆசனங்கள் இன்மையால் பயணிகள் சிலர் நின்றுகொண்டே பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும், அந்த பயணி சுட்டிக்காட்டியுள்ளார்.
பேருந்து உரிமையாளர்கள் மற்றும் நடத்துனர்களின் அலட்சியப்போக்கைக் கடுமையாக விமர்சித்துள்ளார். பயணிகளின் அவசரத் தேவைகள் மற்றும் பாதுகாப்பைக் கருத்தில் கொள்ளாமல், அனுமதிப்பத்திரம் இல்லாத பேருந்தை இயக்கியமை மிகப்பெரிய தவறாகும் என பயணி சாடியுள்ளார்.
அதேவேளை, சட்டப்படி தலையிட்டு நள்ளிரவில் பயணிகளின் பாதுகாப்புக்கு நடவடிக்கை எடுத்த பொலிஸாரின் செயலை அவர் பாராட்டியுள்ளார்.