இனவழிப்பு நீதியைக் கோர கத்தோலிக்க சபை மௌனம் ஏன்? ; சிறீதரன் கேள்வி
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலுக்காக தொடர்ச்சியாகக் குரல் கொடுக்கும் கர்தினாலும் அவரது சபையினரும், இந்த நாட்டில் மக்கள் அநியாயமாகக் கொல்லப்பட்டதை ஏன் அங்கீகரிக்கத் தயங்குகிறார்கள் என தமிழரசுக்கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை (11) இடம்பெற்ற ‘வலுசக்தி மற்றும் வாழ்க்கைச் செலவுப் பாதுகாப்புத் திட்டம்’ தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், கடந்த மே 27 ஆம் திகதி பருத்தித்துறை முனைப் பகுதியிலிருந்து கடலுக்குச் சென்ற நான்கு மீனவர்கள் காணாமல் போயுள்ளதாகவும், அவர்களில் தந்தை மற்றும் மகனும் அடங்குவதாகவும் குறிப்பிட்டார்.
காணாமல் போன மீனவர்களைக் கண்டுபிடிப்பதற்கான உரிய நடவடிக்கைகளை அரசாங்கம் சரியான நேரத்தில் எடுக்கவில்லை என மீனவ சமூகத்தினர் குற்றஞ்சாட்டுவதாகவும், இந்த விவகாரம் தொடர்பில் அரசாங்கம் தெளிவான பதிலை வழங்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் கடந்த மே 18 ஆம் திகதி கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் நாட்டில் இனவழிப்பு நடைபெற்றதாகவும் அது தொடர்வதாகவும் தெரிவித்த கருத்தை சுட்டிக்காட்டிய சிறீதரன், அந்தக் கருத்தை தாம் ஏற்றுக்கொள்வதாக கூறினார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நீதி கோரி குரல் கொடுப்பவர்கள், நாட்டில் அநியாயமாக உயிரிழந்த மக்களுக்கான நீதியை ஏன் கோரத் தயங்குகின்றனர் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
அதேவேளை, யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் 35 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் தங்களது சொந்த நிலங்களுக்கு திரும்ப முடியாமல் இருப்பதாகவும், மயிலிட்டி, தையிட்டி, வசாவிளான் மற்றும் பலாலி உள்ளிட்ட பகுதிகளில் மக்களின் காணிகள் இன்னும் விடுவிக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
நல்லிணக்கம் மற்றும் மனிதாபிமானம் குறித்து பேசும் அரசாங்கம், நீண்டகாலமாக இடம்பெயர்ந்துள்ள மக்களை அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.