கைதான இளைஞர் அடித்துக்கொல்லப்பட்டாரா? நீதிகோரும் உறவுகள்
திருகோணமலை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இளைஞர் நேற்று முன்தினம் (23) உயிரிழந்தார்.
பொலிஸாரால் அண்மையில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த இளைஞர் உயிரிழந்த சம்பவத்தில் நீதியை நிலைநாட்டுமாறு உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இளைஞர் மீது பொலிஸ் நிலையத்தில் கடந்த 21 ஆம் திகதி முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், நேற்று முன்தினம் அந்த இளைஞர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, விசாரணைக்காக பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
முறைப்பாடு செய்தவர் மீதும் தாக்குதல்
எனினும், அவரை பொலிஸார் அடித்துக்கொன்றுவிட்டதாக உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இளைஞரின் மரணத்தில் நீதியை நிலைநாட்டக் கோரி ஜமாலியா பிரதேச மக்கள் நேற்றிரவு வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து , திருகோணமலை பொலிஸார் நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர்.
அதேவேளை இளைஞருக்கு எதிராக முறைப்பாடு செய்தவர் மீதும் சிலர் தாக்குதல் நடத்தியுள்ளதாகவும், தாக்குதலுக்குள்ளானவர் திருகோணமலை மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றதாகவும் கூறப்படுகின்றது.
உயிரிழந்த இளைஞரின் சடலம் பிரேத பரிசோதனைகளை அடுத்து உறவினர்களிடம் கயளிகப்பட்டதாக கூறப்படும் நிலையில், மேலதிக இரசாயன பகுப்பாய்விற்காக உடல்பாகங்கள் கொழும்பிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.