நீரிழிவை சுலபமாக குறைக்க உதவும் சிறந்த வீட்டு வைத்தியங்கள்
உலகளவில் நீரிழிவு நோய் வேகமாகப் பரவி வருகிற நிலையில் தற்போது ஏராளமான இளைஞர்கள் இதற்கு பலியாகி வருகின்றனர். உடலில் போதுமான இன்சுலின் உற்பத்தி செய்யவோ அல்லது அதை சரியாகப் பயன்படுத்தவோ முடியாதபோது, இரத்த சர்க்கரை அளவு உயர்கிறது.

சரியான நேரத்தில் கட்டுப்படுத்தப்படாவிட்டால், அது இதயம், சிறுநீரகங்கள், கண்கள் மற்றும் நரம்புகளுக்கு சேதத்தை ஏற்படுத்தும். இரத்த சர்க்கரை அளவை குறைத்து நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்க உதவும் சில ஆரோக்கியமான உணவுகளை எவையென நாம் இங்கு பார்ப்போம்.

நாவல் பழம்
நாவல் பழம் மட்டுமல்ல, அவற்றின் விதைகளும் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உலர்ந்த நாவல் விதைகளை பொடியாக அரைத்து, தினமும் காலையில் வெறும் வயிற்றில் அரை டீஸ்பூன் வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிக்கவும். இது உடலில் சர்க்கரை உறிஞ்சப்படுவதை மெதுவாக்குகிறது, இன்சுலின் செயல்பாட்டை அதிகரிக்கிறது.

கறிவேப்பிலை
காலையில் எழுந்தவுடன், வெறும் வயிற்றில் 10 கறிவேப்பிலைகளை மென்று சாப்பிடுவது சுகர் நோயாளிகளுக்கு நல்லது. ஏனெனில் கறிவேப்பிலை ஃபாஸ்டிங் இரத்த சர்க்கரையைக் குறைக்க உதவுகிறது. நீரிழிவு நோயாளிகளுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இலவங்கப்பட்டை
இலவங்கப்பட்டை உணவின் சுவையை அதிகரிப்பது மட்டுமல்லாமல், உடலில் குளுக்கோஸ் வளர்சிதை மாற்றத்தையும் மேம்படுத்துகிறது. தினமும் காலையில் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் இரண்டு சிட்டிகை இலவங்கப்பட்டை பொடியைக் கலந்து குடிப்பது இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவுகிறது. இதை கிரீன் டீயிலும் கலந்து குடிக்கலாம்.

பாகற்காய்
பாகற்காய் இன்சுலின் செயல்பாட்டை மேம்படுத்தும் பல சேர்மங்களைக் கொண்டுள்ளது. பாகற்காய் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவுகிறது, கணையத்தை இன்சுலின் உற்பத்தி செய்ய செயல்படுத்துகிறது. தினமும் காலையில் வெறும் வயிற்றில் பாகற்காய் சாற்றைக் குடிப்பது ஒரு சிறந்த வீட்டு வைத்தியமாக கருதப்படுகின்றது. இது கசப்பான சுவை கொண்டதாக இருந்தாலும், நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் ஏற்றது.

நெல்லிக்காய்
நெல்லிக்காய் வைட்டமின் சி நிறைந்துள்ளது மற்றும் கணையத்தை இன்சுலின் வெளியிட செயல்படுத்த உதவுகிறது. வெறும் வயிற்றில் தினமும் ஒரு டீஸ்பூன் நெல்லிக்காய் சாற்றை உட்கொள்வது இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவுவது மட்டுமல்லாமல் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது. நெல்லிக்காய் பொடியை தேன் அல்லது வெதுவெதுப்பான தண்ணீருடன் சேர்த்து எடுத்துக் கொள்ளலாம்.
