பிரதமர் ஹரிணி பெயரில் பரவும் போலி செய்திகள் குறித்து எச்சரிக்கை
பிரதமர் ஹரிணி அமரசூரிய அவர்களின் பெயர், புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை பயன்படுத்தி சமூக ஊடகங்களில் பரவி வரும் போலிச் செய்திகளை நம்ப வேண்டாம் என பிரதமரின் அலுவலகம் பொதுமக்களிடம் அறிவுறுத்தியுள்ளது.
சமூக ஊடகங்களில் பிரதமர் கருத்து தெரிவிப்பது போன்ற போலி காணொளிகளும், அவரின் புகைப்படங்களை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட போலிப் பதிவுகளும் பரவி வருவது கண்டறியப்பட்டுள்ளதாக அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இவ்வாறான போலிச் செய்திகள் மூலம் தொழில்முனைவு வாய்ப்புகள், வேலைவாய்ப்புகள், நாட்டின் பொருளாதாரம் மற்றும் வரிக் கொள்கைகள் தொடர்பாக தவறான தகவல்கள் பரப்பப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி இத்தகைய போலி தகவல்கள் உருவாக்கப்படுவதால், அவற்றை நம்பாமல் அவதானத்துடன் செயல்படுமாறு பொதுமக்களிடம் பிரதமரின் அலுவலகம் கேட்டுக்கொண்டுள்ளது.
அத்துடன், அரசாங்கத்திற்கும் பிரதமரின் நற்பெயருக்கும் களங்கம் விளைவிக்கும் நோக்கில் போலிச் செய்திகளை உருவாக்கி சமூக ஊடகங்களில் பகிர்வது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும் என்றும் அந்த அறிவிப்பில் மேலும் வலியுறுத்தப்பட்டுள்ளது.