உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ; ஹேமசிறி பெர்னாண்டோ, பூஜித் ஜயசுந்தர வழக்கு ஒத்திவைப்பு
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக முன்கூட்டியே உளவுத் தகவல்கள் கிடைத்திருந்த போதிலும், தாக்குதலைத் தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கத் தவறியதாகவும்,
கடமையிலிருந்து குற்றவியல் ரீதியாக புறக்கணித்ததாகவும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு எதிரான வழக்குகள், ஜூன் 12ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக கொழும்பு மூவரடங்கிய நிரந்தர மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் அறிவித்துள்ளது.

இந்த வழக்குகள் இன்று (27) நீதிபதிகள் பிரியந்த லியனகே, விராஜ் விரசூரிய மற்றும் திலகரத்ன பண்டார ஆகியோர் அடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டன.
இதன்போது, பிரதிவாதிகளான ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் நீதிமன்றத்தில் முன்னிலையாகினர்.
வழக்குகளுக்கான மேலதிக சமர்ப்பணங்களை முன்வைப்பதற்காக, விசாரணையை ஜூன் 12ஆம் திகதிக்கு ஒத்திவைக்க நீதிபதிகள் குழாம் உத்தரவிட்டுள்ளது.