வடக்கில் ஊழல்வாதிகள், மோசடியாளர்களுக்கு காத்திருக்கும் சம்பவம் ; யாழ்ப்பாணத்தை அதிரவைத்த பிமல்
வடக்கில் உள்ள ஊழல்வாதிகள், மோசடியாளர்கள், ஆக்கிரமிப்பாளர்கள் என அனைத்துத் தரப்பினருக்கும் எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மேதினப் பேரணி யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் நேற்றைய தினம் (01) இடம்பெற்றது. இந்தப் பேரணியில் உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்.

கடந்த கால ஆட்சியாளர்கள்..
இலங்கையில் கடந்த கால ஆட்சியாளர்கள் உருவாக்கிய பிரச்சினைகள் புற்றுநோய் போன்று பரவி உள்ளன. இவை யாழ்ப்பாணம், மாத்தறை, கொழும்பு என அணைத்து இடங்களிலும் பரவியுள்ளன.
பல வருடங்களானாலும் தீர்வுகள் எட்டப்படக்கூடா என்ற எண்ணத்தில் சூட்சமமாகச் சிந்தித்து கடந்த கால ஆட்சியாளர்கள் பல பிரச்சினைகளை உருவாக்கி இருக்கின்றார்கள்.

ஊழலுக்கு எதிராக நடவடிக்கைகள் தெற்கில் இடம்பெறுவதைப்போன்று வடக்கில் ஏன் இடம்பெறுவதில்லை? என்று எம்மிடம் பலர் கேள்வி எழுப்பி யுள்ளனர்.
அவர்களின் கேள்வி நியாயமானது. கவலைப்பட வேண்டாம். தெற்கில் எத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டதோ அவ்வாறே, வடக்கிலுள்ள ஊழல்வாதிகள், மோசடியாளர்கள், ஆக்கிரமிப்பாளர்கள் என அனைத்துத் தரப்பினருக்கும் எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
வடமாகாணத்தில் உள்ள பல பிரச்சினைகளை நாங்கள் சடுதியாகத் தீர்த்துவைக்க முற்பட்டால், வங்குரோத்து அடைந்துள்ள அரசியல்வாதிகள் மேலெழும்ப எத்தனிப்பார்கள். எனவே, நிதானமான முறையிலேயே இந்தப் பிரச்சினைகளை அணுக வேண்டும்.
மோசடியாளர்களும், சமூக விரோதிகளும் சிறைக்குச் செல்லும் காலமாக அடுத்த இரண்டு வருடங்கள் அமையும். எனவே நம்பிக்கையுடன் இருக்குமாறு மக்களைக் கோருகின்றோம்.
இலங்கையிலுள்ள பத்து நகரங்களை அபிவிருத்தி அடைந்த நகரங்களாக மாற்றுவதற்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முடிவெடுத்திருக்கின்றார். அந்தப் பத்து நகரங்களில் யாழ்ப்பாணமும் அடங்குகின்றது.
யாழ்ப்பாணம் நகரத்திலும் பாரிய அபிவிருத்திப் பணிகளைச் செய்யவுள்ளோம் என்றும் தெரிவித்துள்ளார்.