கட்டுநாயக்க கழிவறை குப்பைத் தொட்டியில் ஆபத்தான பொருள்; ஆடிப்போன அதிகாரிகள்
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வருகை முனையத்தில் 1 கோடியே 18 இலட்சத்து 70 ஆயிரம் ரூபா பெறுமதியான 'ஹஷீஷ்' போதைப்பொருள் தொகுதியொன்று கைவிடப்பட்ட நிலையில் அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளது.
இன்று திங்கட்கிழமை (03) அதிகாலை 12.00 மணியளவில் விமான நிலைய வருகை முனையத்தின் 3 ஆம் இலக்கப் பயணப்பைப் பட்டையப் பகுதிக்கு அருகில் உள்ள பெண்கள் கழிப்பறையின் 02 குப்பைத் தொட்டிகளுக்குள் இருந்தே இந்தப் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

187 கிராம் எடையுடைய 'ஹஷீஷ்' போதைப்பொருள்
07 பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டிருந்த 1 கிலோகிராம் 187 கிராம் எடையுடைய 'ஹஷீஷ்' போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். போதைப்பொருளுடன் சேர்த்து சில பெண்களுக்கான காலணிகள் மற்றும் ஆடைகளும் அக்குப்பைத் தொட்டிகளுக்குள் வீசிச் செல்லப்பட்டிருந்தன.
விமான நிலையத்தை விட்டு வெளியேறும் போது ஏற்பட்ட அச்சம் அல்லது சந்தேகம் காரணமாக, கடத்தல்காரர்கள் இப்போதைப்பொருளைக் கழிவறை குப்பைத் தொட்டியில் வீசிவிட்டு தப்பிச் சென்றிருக்கலாம் எனச் சுங்க அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
கைப்பற்றப்பட்ட 'ஹஷீஷ்' போதைப்பொருள் தொகுதி மேலதிக விசாரணைகளுக்காகக் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.