இணைய மோசடி சம்பவங்கள் குறித்து வெளியான எச்சரிக்கை
இணைய மோசடி தொடர்பாக பல சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக இலங்கை கணினி அவசரகால பதிலளிப்பு மையம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய, வெளிநாடுகளில் பங்குகளில் முதலீடு செய்வதற்காகப் பெரிய தொகைகளை வழங்குவதாக வாக்குறுதி வழங்கிய இணைய மோசடி தொடர்பான முறைப்பாடுகளே அதிகளவில் பதிவாகியுள்ளன.
இலங்கை கணினி அவசரகால பதிலளிப்பு மையத்தின் தகவல் பாதுகாப்பு பொறியாளர் சாருக தமுனுபொல இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த இணைய மோசடிகளின் ஊடக 10 இலட்சம் முதல் 3 கோடி வரையிலான பணம் இழக்கப்பட்டுள்ள சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அதிக அவதானம் செலுத்துவதுடன், ஏதேனும் வகையில் முதலீடுகள் குறித்த தகவல்கள் கிடைத்தால் அதன் உண்மைத் தன்மைகளை ஆராயுமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையில் பங்குகளில் முதலீடு செய்வதற்கு பல்வேறு வழிமுறைகள் இருக்கின்றன.
இதனைத் தாண்டி வெளிநாடுகளில் முதலீடுகள் செய்வதாகக் கூறி ஏதேனும் அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள் வந்தால் அதனை ஆராயுமாறும் தகவல் பாதுகாப்பு பொறியாளர் சாருக தமுனுபொல வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், எந்தக் காரணம் கொண்டும் தனிப்பட்ட தகவல்கள், வங்கித் தகவல்கள் உள்ளிட்ட எதனையும் யாருக்கும் வழங்க வேண்டாம் என்றும் இலங்கை கணினி அவசரகால பதிலளிப்பு மையத்தின் தகவல் பாதுகாப்பு பொறியாளர் சாருக தமுனுபொல தெரிவித்துள்ளார்.