மனித குலத்திற்கே அச்சுறுத்தல் ; கட்டுப்பாட்டை மீறுகிறதா செயற்கை நுண்ணறிவு?
உலகப் புகழ்பெற்ற OpenAI நிறுவனத்தின் மென்பொருள் பொறியியலாளர் ஒருவர், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பமானது மனித குலத்தின் இருப்புக்கே அச்சுறுத்தலாக அமையக்கூடும் என எச்சரித்து தனது பதவியிலிருந்து விலகியுள்ளார்.
OpenAI நிறுவனத்தில் பணியாற்றி வந்த முக்கிய பொறியியலாளர் ஒருவர், அந்த நிறுவனத்தின் AI பாதுகாப்பு நடைமுறைகளில் திருப்தியின்மை காரணமாகப் பதவி விலகியுள்ளார்.
AI தொழில்நுட்பம் மனிதக் கட்டுப்பாட்டை மீறிச் செல்லும் அபாயம் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சில நாட்களுக்கு முன்னர், மற்றுமொரு முன்னணி AI நிறுவனமான 'அந்த்ரோபிக்' (Anthropic) நிறுவனத்தின் பாதுகாப்புப் பிரிவுத் தலைவர் இதே போன்ற காரணங்களைக் கூறிப் பதவியிலிருந்து விலகியிருந்தார்.
AI நிறுவனங்கள் பாதுகாப்பை விட லாபத்திற்கும், புதிய கண்டுபிடிப்புகளுக்குமே அதிக முன்னுரிமை அளிக்கின்றன என்பதே இவர்களின் பிரதான குற்றச்சாட்டாக உள்ளது.
போதிய பாதுகாப்பு கட்டுப்பாடுகள் இன்றி AI தொழில்நுட்பம் வளர்க்கப்படுவது எதிர்காலத்தில் பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் என அவர்கள் எச்சரிக்கின்றனர்.
எனினும், OpenAI மற்றும் ஏனைய நிறுவனங்கள் தாங்கள் பாதுகாப்பான முறையிலேயே AI தொழில்நுட்பத்தை உருவாக்கி வருவதாகத் தொடர்ந்து கூறி வருகின்றன.
சென் பிரான்சிஸ்கோவை தளமாகக் கொண்ட முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றும் உயர் அதிகாரிகள் மற்றும் பொறியியலாளர்கள் இவ்வாறு வரிசையாக வெளியேறுவது, சர்வதேச தொழில்நுட்ப உலகில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.