தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தால் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
மண்சரிவு குறித்த முன்னெச்சரிக்கைகள் தொடர்பில் விழிப்புடன் இருக்குமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள வானிலை முன்னறிவிப்பின்படி, இன்று (29) முதல் அடுத்த சில நாட்களுக்கு வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளது.

மிகுந்த அவதானம்
அதற்கமைய, குறிப்பாக மலைப்பாங்கான பகுதிகளிலும் நீரோடைகளின் இருமருங்கிலும் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் பரிசோதிக்கப்பட்டு, மண்சரிவு அபாயம் ஏற்படக்கூடும் என அடையாளம் காணப்பட்டுள்ள வீடுகள் மற்றும் பகுதிகளில் வசிக்கும் மக்கள், இதுவரையில் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களுக்கு அமைய செயற்படுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
அதேபோன்று, மலைச்சரிவுகள், பாறைகள் சரிந்து விழக்கூடிய இடங்கள் மற்றும் மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள், ஏற்படக்கூடிய அபாயகரமான நிலைமைகள் குறித்து விழிப்புடன் இருக்குமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.
மேலும், தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் அவ்வப்போது வெளியிடப்படும் மண்சரிவு முன்னெச்சரிக்கை அறிவிப்புகளுக்கு அமைய செயற்படுமாறும் மக்களிடம் கோரப்பட்டுள்ளது.
அத்துடன், ஏற்கனவே மண்சரிவுக்கான ஆரம்ப அறிகுறிகளைக் காட்டும் இடங்கள், மீண்டும் பெய்யும் சிறு மழையினால் கூட மண்சரிவுக்கு உள்ளாகக்கூடும் என்பதால், அத்தகைய பகுதிகளில் வசிக்கும் மக்கள் மழைவீழ்ச்சி படிப்படியாக அதிகரிப்பதைக் கவனித்தால், உடனடியாக அவ்விடங்களிலிருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மக்களை அறிவுறுத்தியுள்ளது.