இணையவழி ஊடாக வாகனங்களை வாங்க காத்திருப்போர் அவதானம் ; இளைஞனின் மோசடி அம்பலம்
இணையவழி ஊடாக வாகனங்களை விற்பனை செய்வதற்கான விளம்பரங்களை வெளியிட்டுத் தருவதாகக் கூறிப் பொதுமக்களை ஏமாற்றிப் பண மோசடியில் ஈடுபட்ட சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட விசேட விசாரணைகளுக்கு அமைவாக, நேற்று புதன்கிழமை (14) இரவு ஹோமாகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவத்தகம பகுதியில் வைத்து இச்சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வாகன விற்பனை
கைது செய்யப்பட்டவர் மாவத்தகம, ஹோமாகம பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞராவார். இச்சந்தேகநபர் பேஸ்புக்கில் வணிகக் கணக்கொன்றின் ஊடாக வாகனங்களை விற்பனை செய்து தருவதாகத் தெரிவித்துள்ளார்.
இதற்காக ஒரு வாரத்திற்கு 5,000 ரூபா, இரண்டு வாரங்களுக்கு 10,000 ரூபா மற்றும் ஒரு மாதத்திற்கு 15,000 ரூபா வீதம் கட்டணமாகப் பேசி, தொலைபேசி ஊடாகத் தொடர்புகொண்டு பணத்தைப் பெற்றுக்கொண்டுள்ளார்.
பணத்தைப் பெற்றுக்கொண்ட பின்னர் விளம்பரங்களை வெளியிடாமல் ஏமாற்றியதுடன், குற்றவியல் நம்பிக்கைத் துரோகம், ஆள்மாறாட்டம் மற்றும் மோசடி உள்ளிட்ட குற்றங்களை இவர் இழைத்துள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினர் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.