சவுதியில் மீண்டும் விசாரணைக்கு வரும் அனோஜன் வழக்கு
சவுதி அரேபியாவில் கைது செய்யப்பட்டு மரண தண்டனை அச்சுறுத்தலை எதிர்நோக்கியிருந்த சிவராசா அனோஜனுக்கு மரண தண்டனை தளர்த்தப்பட்டுள்ள போதிலும், இம்மாதம் 17ஆம் திகதி மீண்டும் ஒரு வழக்கு விசாரணை இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த செய்தியை வெளிநாட்டு அலுவல்கள் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தொலைபேசி ஊடாக தமக்கு அறிவித்துள்ளதாக அனோஜனின் சகோதரன் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அனோஜனின் சகோதரன்,

17ஆம் திகதி வழக்கு மீண்டும் விசாரணை
"எனது அண்ணனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை தளர்த்தப்பட்டுள்ள விடயம் குறித்துப் பிரதி வெளிநாட்டு அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தொலைபேசி மூலம் எம்மைத் தொடர்பு கொண்டு நேரில் தெரிவித்தார்.
இது எமக்கு ஓரளவு ஆறுதலைத் தந்த போதிலும், எதிர்வரும் ஒக்டோபர் 17ஆம் திகதி அண்ணனின் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது. அந்த வழக்கு விசாரணையின் முடிவுகள் வெளிவந்த பின்னரே எமது குடும்பத்திற்குப் பூரண நிம்மதி கிடைக்குமா என்பது தெரியவரும்" எனத் தெரிவித்தார்.
அனோஜனின் விடுதலைக்காகவும் உயிரைக் காப்பதற்காகவும் இலங்கை அரசாங்கம், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு, இராஜதந்திரிகள், மதத் தலைவர்கள் மற்றும் அரசியல்வாதிகள் தொடர்ந்து முன்னெடுத்து வரும் முயற்சிகளுக்குக் குடும்பத்தினர் தமது நன்றிகளையும் வெளியிட்டுள்ளனர்