மதுபோதையில் கடமை ; திருகோணமலையில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கு அதிரடி காட்டிய பொலிஸார்
திருகோணமலை, மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மதுபோதையில் கடமையில் இருந்ததாகக் கூறப்படும் வனஜீவராசிகள் திணைக்களத்தில் பணியாற்றும் இரு சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இன்று (15) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
மஹதிவுல்வெவ பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய ஒருவரும், அத்தாபெந்திவெவ பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

மதுபோதை
யானைகளிடமிருந்து மக்களைப் பாதுகாக்கும் நோக்கில், வனஜீவராசிகள் திணைக்களத்தின் கீழ் யானை மின் வேலிகளைப் பாதுகாக்கும் பணியில் சிவில் பாதுகாப்புப் படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கடமையில் ஈடுபட்டிருந்த உத்தியோகத்தர்களை வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் சோதனையிட்டபோது, குறித்த இருவரும் மதுபோதையில் இருந்ததாகவும், அவர்களிடமிருந்து போத்தலில் அடைக்கப்பட்ட சாராயம் மீட்கப்பட்டதாகவும் திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, இருவரும் மொரவெவ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
பின்னர், மருத்துவப் பரிசோதனைக்காக மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டபோது, இருவரும் மதுபோதையில் இருந்தமை உறுதிப்படுத்தப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட இருவரையும் திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மொரவெவ பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.