குற்றச் செயல்களில் ஈடுபட்ட பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நபர் கைது
வீடு உடைப்பு உள்ளிட்ட பல குற்றச் செயல்களுடன் தொடர்புடைய, நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நபர் ஒருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் இணையக் கண்காணிப்பு மற்றும் விசாரணைப் பிரிவினரால் தனமல்வில பகுதியில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார்.
இராஜகிரிய பகுதியில் உள்ள வீடொன்றை உடைத்து உள்ளே நுழைந்த சந்தேகநபர், அங்குள்ள பெண்ணொருவரின் கைபேசி மற்றும் ரூபா 25,000 ரொக்கப் பணத்தைத் திருடித் தப்பியுள்ளார்.

விசாரணைகள்
திருடப்பட்ட கைபேசியைப் பயன்படுத்தி, அப்பெண் உறங்கிக் கொண்டிருக்கும் போது எடுக்கப்பட்ட காணொளியை அவரின் தொலைபேசி தொடர்புகளுக்கு அனுப்பியுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பில் முதலில் வெலிக்கடை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில், பின்னர் விசாரணைகள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு மாற்றப்பட்டன.
குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட தீவிர கண்காணிப்பு மற்றும் விசாரணைகளின் பலனாகவே சந்தேகநபர் தனமல்வில பகுதியில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், இச் சம்பவத்துடன் தொடர்புடைய மேலதிக விசாரணைகளில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.