பரபரப்பாகும் தமிழக அரசியல் ; நிறுத்தப்பட்ட பதவியேற்பு விழா ; மீண்டும் ஆளுநரை சந்திக்க விரையும் விஜய்
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று பதவியேற்பதாக கூறிய நிலையில், பெரும்பான்மை இன்னும் கிடைக்காததாக நேரு உள்விளையாட்டு அரங்கில் பதவியேற்பு ஏற்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று (07) மீண்டும் ஆளுநர் அர்லேகரை சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. 24 மணி நேரத்தில் இது இரண்டாம் முறையாக மீண்டும் ஆளுநரை சந்திக்கும் விஜய் ஆட்சியமைக்க அழைக்க வேண்டும் என மீண்டும் வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பதவியேற்பு விழா
நடந்து முடிந்த தேர்தலில் 108 இடங்களை தக்க வைத்திருக்கும் தமிழக வெற்றிக் கழகம் காங்கிரஸின் உறுப்பினர்களின் ஆதரவை நேற்று பெற்றது.
இன்னும் 6 பேரின் ஆதரவு தேவைப்படுகிறது. அதன்படி, இடதுசாரிகள் (04), விடுதலைச் சிறுத்தைகள் (02) கட்சிகளிடம் தவெக ஆதரவு கோரியுள்ளது.
இதனிடையே, நேற்று மாலை ஆளுநர் ஆா்.வி. ஆா்லேகரை நேரில் சந்தித்து தவெக தலைவர் விஜய் உரிமை கோரினார். ஆனால், இதுவரை ஆட்சி அமைக்க விஜய்யை ஆளுநர் அழைக்கவில்லை.
ஆளுநர் மாளிகையில் இருந்து விஜய்க்கு அழைப்பு விடுக்கப்படாத நிலையில், அதிகாரிகள் பதவி ஏற்புக்கான முன்னேற்பாடுகளைச் செய்ய முற்பட்டது விமா்சனத்துக்கு உள்ளானது.
இந்த நிலையில், நேரு உள்விளையாட்டு அரங்கில் விஜய் பதவியேற்பு விழாவுக்கு செய்யப்பட்டு வந்த முன்னேற்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளது.