தமிழ் பாடசாலை ஒன்றில் ஆசிரியையை அடித்த உப அதிபர்; நால்வர் கைது !
பதுளை, வெலிமடை கல்வி பணிமனைக்குட்பட்ட உடபுஸ்ஸல்லாவ அலக்கொலை தமிழ் வித்தியாலயத்தில் பணியாற்றும் ஆசிரியை ஒருவர் கடமை நேரத்தில் தாக்குதலுக்கு இலக்காகியமை தொடர்பாக பாடசாலை உப அதிபர் உட்பட நால்வர் ஊவா பரணகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த தாக்குதல் சம்பவம் (13.08.2024) செவ்வாய் கிழமை இடம்பெற்றுள்ள நிலையில் இந்த கைது சம்பவம் நேற்று (15) இடம்பெற்றதாக ஊவா பரணகம பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
அத்துமீறிய இடமாற்றம்
கடந்த ஐந்து வருடங்களாக குறித்த பாடசாலையில் கடமையாற்றி வரும் ஆசிரியைக்கு சுமார் ஒன்றரை ஆண்டுகளாக மாணவர்களுக்கு கற்பிக்க பாட நேரசூசி வழங்கப்படாது பாடசாலை அதிபரால் ஓரங்கட்டப்பட்டு உள்ளார்.
அதே நேரத்தில் பாடசாலையில் ஆசிரியராக புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ள அதிபரின் மகனுக்கு கூடுதலான அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. அதோடு பாதிக்கப்பட்ட ஆசிரியை பாடசாலையின் கற்றல் உள்ளிட்ட அனைத்து விடயங்களிலும் ஓரங்கட்டப்பட்டு வந்துள்ளது தெரியவந்துள்ளது.
பாடசாலையில் மேலதிக ஆசிரியர்கள் சேவைக்கு உள்ளதாக கூறி பாடசாலை அதிபர் பாதிக்கப்பட்ட ஆசிரியையை இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளார்.
அதே சந்தர்ப்பத்தில் அத்துமீறிய இடமாற்றத்தை கண்டித்து குறித்த ஆசிரியை கல்வி திணைக்களத்தின் மேலதிகாரிகளுக்கு புகார் செய்துள்ளார்.
வழக்கு தொடர்ந்து இடமாற்ற தடை
எனினும் நாளுக்கு நாள் பாடசாலை அதிபரின் செயற்பாட்டை தாங்கிக்கொள்ள முடியாத ஆசிரியை அத்துமீறிய இடமாற்றத்தை தடுக்க சிரேஷ்ட சட்டத்தரணி ஒருவரின் உதவியுடன் வழக்கு தொடர்ந்து இடமாற்றத்தை தடை உத்தரவையும் பெற்றுள்ளார்.
இதன் காரணமாக ஆத்திரம் கொண்ட அதிபர்,உப அதிபர் மற்று ஆசியர்கள் , ஆசியை மீது தாக்குதலை மேற்கொண்டதாக கூறப்படுகின்றது.
ஆசிரியையின் முறைப்பாட்டுக்கு அமைய நடவடிக்கை எடுத்து பொலிஸார் தாக்குதலை நடத்திய நால்வரை கைது செய்து விசாரணைகளின் பின் வெளிமடை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவும் உள்ளதாக தெரிவித்தனர்.