வெடுக்குநாறிமலை விவகாரம்; கருணா அம்மானும் கண்டனம்!
இந்து மக்களின் அவர்களின் உணர்வுகளை சிதைக்கும் நோக்கில் பொலிஸார் செயற்படுவதை இனி வரும் காலங்களில் பார்த்து மௌனித்திருக்க போவதில்லை என கருணா அம்மானின் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின், உப தலைவர் ஜெயா சரவணன் தெரிவித்துள்ளார்.
வவுனியா வெடுக்குநாறி மலையில் கடந்த சிவராத்திரி தினத்தன்று இடம்பெற்ற குழப்பநிலை தொடர்பில் இன்று வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே இவ் விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இனவாத வன்முறை
மக்களின் பாதுகாவலர்களாக நிற்க வேண்டிய பொலிஸாரே மக்களையும், அவர்களின் உணர்வுகளையும் புண்படுத்தும் வகையில் மிக கொடூரமாக நடந்து கொண்டது எமக்கு அதிர்ச்சியையும் , கோபத்தினையும் ஏற்படுத்தியிருந்தது.
இதே மாதிரியான செயற்பாடுகள் பரவலாக எமது வணக்க தலங்களில் இந்து சமயத்தவர்களின் உணர்வுகளை சிதைக்கும் நோக்கில் நடந்து வருவதனை இனி வரும் காலங்களில் பார்த்து மௌனித்திருக்க மாட்டாேம்.
வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் , வன்னிமாவட்ட புத்திஜீவிகள் ஏன் இதற்கான ஒரு எதிர்வினையை , நடவடிக்கையை எடுக்கவில்லை என்பது கவலைக்குரிய விடயமாக இருக்கின்றது. மதங்களை , சட்டங்களை தாண்டி மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.
வருடத்திற்கு ஒரு தரம் வரும் சிவராத்திரி தினத்தை மக்கள் நினைவுகோருவதையும், அதனை கொண்டாடுவதையும் தடுக்கும் முகமாக பரவலாக சிவதலங்களில் பொலிஸாரினால் ஏற்படுத்தப்பட்டு வந்த வன்முறைகளை மிகவும் வன்மையாக கண்டிப்பதோடு இதன் பின்னணியில் புத்த பிக்குகள் இருப்பது மிகவும் வேதனையளிக்கின்றது.
பொலிஸார் நீதிமன்ற உத்தரவுகளுக்கு கூட மதிப்பளிக்காது பௌத்த பிக்குகளின் உத்தரவுகளுக்கே பாதுகாப்பு தரப்பினரால் நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் தமிழர்களுக்கு எதிராக சிங்கள இனவாத வன்முறையை தூண்ட முயற்சிப்பது போல் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.