கொழும்பு தாமரை கோபுர விருந்துபசாரத்தில் விபரீதம்;ஜோடிகளுக்கு நேர்ந்த கதி
கொழும்பு தாமரை கோபுரத்தில் உள்ள உணவகம் ஒன்றில் இடம்பெற்ற விருந்துபசாரத்தின் போது போதைப்பொருள் உட்கொண்ட இளைஞனும் பெண்ணும் உயிரிழந்துள்ளனர்.
குறித்த இருவரும் உடல்நலம் பாதிக்கப்பட்டு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மருதானை பொலிஸார் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
முல்லேரியா, உடுமுல்ல பிரதேசத்தை வசிப்பிடமாக கொண்ட அழகு நிலையம் ஒன்றின் முகாமையாளரான ஹெட்டியாராச்சி ரசாங்கிகா ருக்ஷானி என்ற 27 வயதுடைய பெண்ணும், தெஹிவளையில் வசித்து வந்த சமிந்து திரங்க பெர்னாண்டோ என்ற 22 வயதுடைய இளைஞருமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த போதை மருந்துகளை உட்கொண்டதன் பின்னர் சுகவீனமடைந்த இருவரும் சம்பவ இடத்தில் இருந்தவர்களினால் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
மாளிகாகந்த நீதவான் உயிரிழந்த இருவர் தொடர்பில் முதற்கட்ட விசாரணைகளை மேற்கொண்டதுடன், உயிரிழந்த இருவரின் பிரேத பரிசோதனைகளை கொழும்பு சட்ட வைத்திய அதிகாரி அலுவலகத்தில் வைத்து மேற்கொண்டு அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
இதேவேளை, தனது மகளின் மரணம் சந்தேகத்திற்குரியது என உயிரிழந்த பெண்ணின் தாயார் டொனா ரசிகா நிலாந்தி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
குறித்த விருந்தில் உயிரிழந்த ரசாங்கிகா உட்பட ஏழு பேர் போதைப்பொருளை உட்கொண்டதாக அவரது காதலன் எனக் கூறிக்கொள்ளும் இளைஞன் கூறியதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.