இலங்கையின் பொருளாதாரத்தில் முக்கிய வளர்ச்சி ; சுற்றுலாத்துறை 2026இல் அபார வளர்ச்சி
இலங்கையின் சுற்றுலாத்துறை 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அபாரமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் (மார்ச் 11 வரை) இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் மொத்த எண்ணிக்கை 623,651 ஆக உயர்ந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
மார்ச் மாதத்தின் முதல் 11 நாட்களில் மட்டும் 66,996 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.
இக்காலப்பகுதியில் அதிகப்படியான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்த நாடுகளின் வரிசையில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

மார்ச் 01 முதல் மார்ச் 11 வரையான காலப்பகுதியில் மட்டும் இந்தியாவிலிருந்து 16,032 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.
இந்தியாவைத் தொடர்ந்து ரஷ்யா, ஐக்கிய இராச்சியம், ஜேர்மனி மற்றும் சீனா ஆகிய நாடுகள் மார்ச் மாதத்தின் முதல் 11 நாட்களில் அதிக சுற்றுலாப் பயணிகளை அனுப்பிய முக்கிய நாடுகளாகக் காணப்படுகின்றன.
2026 ஜனவரி 01 முதல் மார்ச் 11 வரையான ஒட்டுமொத்தக் காலப்பகுதியை நோக்கும்போது, முன்னணி இருபது சந்தைகளில் இந்தியா தனது முதலிடத்தை வலுவாகத் தக்கவைத்துள்ளது.
இக்காலப்பகுதியில் இந்தியாவில் இருந்து மட்டும் 115,772 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர்.
இந்தியாவைத் தொடர்ந்து அதிகப்படியான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்த நாடுகளாக முறையே ஐக்கிய இராச்சியம், ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகள் காணப்படுகின்றன.
இலங்கையின் பொருளாதார மீட்சியில் சுற்றுலாத்துறை மிக முக்கிய பங்கு வகித்து வரும் நிலையில், இந்த ஆண்டு ஆரம்பத்திலேயே கிடைத்துள்ள இந்த சாதகமான புள்ளிவிபரங்கள் சுற்றுலாத் துறையினரிடையே பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளன.