வெலிகம பிரதேச சபைத் தலைவர் படுகொலை ; வெளியான புதிய தகவல்
வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலை தொடர்பாக சிசிடிவி காட்சிகளைப் பயன்படுத்தி விசாரணையைத் தொடங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அதன்படி, நான்கு பொலிஸ் குழுக்கள் மூலம் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தென் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் கித்சிறி ஜயலத் தெரிவித்தார்.
சிசிடிவி காட்சிகள்
நேற்று (22) காலை, வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகர தனது உத்தியோகபூர்வ அலுவலகத்தில் அடையாளம் தெரியாத ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். வெள்ளை சட்டை அணிந்து கருப்பு நிற முகக்கவசத்துடன் வந்த துப்பாக்கிதாரி, தலைவரின் அலுவலகத்திற்குள் நுழைந்தார்.
துப்பாக்கிதாரி உத்தியோகபூர்வ இருக்கையில் இருந்த தலைவர் லசந்த விக்ரமசேகரவை நான்கு முறை சுட்ட பின்னர், மற்றொரு நபருடன் மோட்டார் சைக்கிளில் தப்பிச் செல்லும் விதம் சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் பலத்த காயமடைந்த பிரதேச சபைத் தலைவர், மாத்தறை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார். துப்பாக்கிச் சூட்டில் பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் தலை, கழுத்து மற்றும் மார்பு பகுதிகளில் காயம் ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அதன்படி, தென் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் கித்சிறி ஜயலத்தின் நேரடி மேற்பார்வையின் கீழ் நான்கு பொலிஸ் குழுக்கள் சம்பவம் குறித்து விசாரணைகளைத் தொடங்கியுள்ளன.
இருப்பினும், சம்பவம் தொடர்பாக இதுவரை எந்தவொரு சந்தேகநபரும் கைது செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதற்கிடையில், பூசா சிறையில் அடைக்கப்பட்டுள்ள மிதிகம ருவனின் பிரிவினரால் இந்தக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.