சந்தையில் நச்சு இரசாயனம் கலக்கப்பட்ட காய்கறிகள்?
நாட்டில் சந்தையில் விற்பனை செய்யப்படும் காய்கறிகள் மற்றும் பழங்களின் தரத்தை ஆராய்வதற்கு நுகர்வோர் விவகார அதிகாரசபை விசேட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
சுகாதாரம், வர்த்தகம், விவசாயம் ஆகிய அமைச்சுகளும், இலங்கை தரக்கட்டளைகள் நிறுவனம் உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட அரசாங்க நிறுவனங்கள் இணைந்து இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ளதாக அந்த அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் சமந்த கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

பழங்கள் மற்றும் காய்கறிகள் நுகர்வுக்குப் பொருத்தமான நிலையில் இருப்பதை உறுதிசெய்வதற்காகத் தற்போது புதிய தரவுத்தளம் ஒன்று உருவாக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், காய்கறி மற்றும் பழ விவசாயிகள் மற்றும் வியாபாரிகளைத் தெளிவுபடுத்தும் விசேட விழிப்புணர்வுத் திட்டம் ஒன்றையும் நுகர்வோர் விவகார அதிகாரசபை ஆரம்பித்துள்ளது.
மனித உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் நச்சு இரசாயனங்களைப் பயன்படுத்தி, காய்கறிகள் மற்றும் பழங்களைப் பாதுகாத்து வைக்கும் வியாபாரிகள் குறித்து இதன்போது விசேட கவனம் செலுத்தப்படும் என்றும், அத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரசபை தெரிவித்துள்ளது.