வவுனியாவில் நூலிழையில் தவிர்க்கப்பட்ட பாரிய விபத்து
வவுனியா, தவசிகுளம் பகுதியில் மாற்றுத்திறனாளி மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ரயில் கடவையைக் கடக்க முற்பட்டபோது, கடவை ஊழியரின் அலட்சியத்தால் ஏற்படவிருந்த பாரிய விபத்து நூலிழையில் தவிர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது
. தவசிகுளம் பகுதியில் பேருந்து ஒன்றில் மாற்றுத்திறனாளி மாணவர்கள் பயணித்துள்ளனர். பேருந் ரயில் கடந்து சென்றுகொண்டிருந்த வேளையில், குறித்த ரயில் கடவையின் பாதுகாப்புக் கதவுகள் மூடப்படாமல் திறந்த நிலையிலிருந்ததாக கூறப்படுகின்றது.

பாதுகாப்புக் கதவுகள் மூடப்படாமல் திறந்த நிலையில்
இதன்போது மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து கடவைக்குள் நுழைய முற்பட்ட நிலையில், ரயில் வருவதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பேருந்து சாரதி உடனடியாக பேருந்தை நிறுத்தியுள்ளார்.
இதனால் பெரும் அனர்த்தம் ஒன்று தவிர்க்கப்பட்டதுடன், பேருந்தில் பயணித்த மாற்றுத்திறனாளி மாணவர்களும் அதிஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.
ரயில் கடந்து சென்ற பின்னரே கடவைப் பொறுப்பிலிருந்த ஊழியர் தூக்கத்திலிருந்து விழித்ததாகவும், தனது தவறுக்காக பொதுமக்களிடம் மன்னிப்பு கோரியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் மற்றும் முச்சக்கர வண்டிச் சாரதிகள் சம்பவ இடத்தில் ஒன்றுகூடி, கடவை ஊழியரின் பொறுப்பற்ற செயற்பாட்டுக்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
மேலும் சம்பவம் தொடர்பில் வவுனியா தலைமை ரயில் நிலையத்திற்கும், ரயில் கடவைகளுக்குப் பொறுப்பான அதிகாரிகளுக்கும் உடனடியாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.