அனுர அரசாங்கத்தை சாடும் வாசுதேவ நாணயக்கார
நாட்டில் தற்போதைய நிலையில் கலவரம்,யுத்தம் அல்லது கட்டுப்படுத்த முடியாத மக்கள் கொந்தளிப்பு எதுவுமில்லை.அவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தில் மக்களின் அனைத்து விதமான சுதந்திரத்தையும் முடக்கும் கடுமையான ஜனநாயக விரோதச் சட்டமூலங்களை நிறைவேற்றுவது அரசாங்கத்தின் பலவீனத்தையே காட்டுகிறது என முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இச்செயற்பாடுகளில் எந்தவொரு நியாயமும் இல்லை என்பதை இன்று மக்களும் உலகமும் நன்கு அறிவார்கள் என்று முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்துள்ளார்.தொடர்ந்துரையாற்றிய அவர்
சர்வதேச அமைப்புகளும் இதனை சுட்டிக்காட்டி தமது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றன. எனவே இது தொடர்பில் நாட்டு மக்களின் எதிர்ப்பு பரவலாக எழாவிட்டாலும், விழிப்புணர்வையுடைய இளைஞர்கள் தொழிற்றுறையினர் மற்றும் நாட்டிலுள்ள புத்திஜீவிகள் ஆகிய அனைத்துத் தரப்பினரும் இந்த ஜனநாயக விரோதச் சட்டமூலங்கள் குறித்து எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.அவர்கள் காரண காரியங்களுடன் அதைச் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதை மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் என உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. அவ்வாறு மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றுவதற்குத் தேவையான ஆட்பலம் அரசுக்கு நாடாளுமன்றத்தில் உள்ளது. எனவே இது நிறைவேற்றப்படும்.
எதிர்க்கட்சிகளால் நாடாளுமன்றத்தில் எதிர்ப்பை வெளிப்படுத்துவதும் இதற்கு எதிரான கருத்துகளைச் சுட்டிக்காட்டுவதும் மட்டுமே செய்யக்கூடிய எல்லைக்குட்பட்ட பணியாகும் எனக் குறிப்பிட்டுள்ளார்.