பாடசாலை பேருந்து விபத்து; மேலதிக தகவல்
ஹபராதுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொக்கலையில், கல்விச் சுற்றுலாவிற்காக மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று இன்று (25) பிற்பகல் ரயிலுடன் மோதியதில் 10 சிறுவர்கள் காயமடைந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொக்கலையில் அமைந்துள்ள மார்ட்டின் விக்ரமசிங்க நினைவு அருங்காட்சியகத்திற்கு அருகிலுள்ள ரயில் கடவையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
பெலியத்தையிலிருந்து மருதானை நோக்கிப் பயணித்த ரயில், பேருந்தின் பின்பகுதியில் மோதியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, அருங்காட்சியகத்தைப் பார்வையிட்ட பின்னர் கொட்டாவ நோக்கித் திரும்பிக்கொண்டிருந்த மாணவர்கள், தனியார் கல்வி வகுப்பு ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுடன் பேருந்தில் பயணித்துள்ளனர்.
விபத்து இடம்பெற்றபோது பேருந்தில் 41 சிறுவர்கள், 14 கல்வி வகுப்பு ஆசிரியர்கள் மற்றும் ஆறு பெற்றோர்கள் என மொத்தம் 61 பேர் இருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
14 மற்றும் 15 வயதுடைய காயமடைந்த சிறுவர்கள் காலி தேசிய வைத்தியசாலை மற்றும் உனவட்டுனை வைத்தியசாலை உள்ளிட்ட பல்வேறு வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து இடம்பெற்ற ரயில் கடவையில் பாதுகாப்புத் தடுப்புகள் இல்லாததுடன், எச்சரிக்கை விளக்குகள் மற்றும் ஒலி எச்சரிக்கை அமைப்பு மூலமாகவே ரயில் கடவையின் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்து தொடர்பில் 40 வயதுடைய பேருந்துச் சாரதியும் 21 வயதுடைய நடத்துநரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹபராதுவ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.